ADDED : அக் 15, 2024 05:32 AM

மேலுார்: திருவாதவூர் பகுதியில் மழை நீர் சாகுபடி நிலங்களில் நிரம்பியதால் விதைப்பு நெல் அழுகி விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15ல் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணி தீவிரமாக நடக்கிறது. திருவாதவூர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு முக்கம்பட்டி, மருதுார், டி.வெல்லாளபட்டி, செம்பூர் பகுதிகளில் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. மழை நீர் திருவாதவூர் பகுதி விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் விதை நெல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயி கிருஷ்ணன் கூறியதாவது: விவசாய நிலத்தை உழுது நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு 30 நாட்களில் ரூ.7 ஆயிரம் செலவு செய்துள்ளோம். 3 அடி உயரத்திற்கு விவசாய நிலங்களில் தண்ணீர் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. நெல் முளைக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விதை நெல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால் நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறையினர் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீண்டும் விதை நெல் வழங்கி வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.