/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீரற்ற இதயத்துடிப்பு குறித்த சிறப்பு மாநாடு
/
சீரற்ற இதயத்துடிப்பு குறித்த சிறப்பு மாநாடு
ADDED : ஜூலை 20, 2025 04:54 AM
மதுரை: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதயவியல், மின் உடலியங்கியல் மற்றும் இதயத்துடிப்பு மேலாண்மை துறை சார்பில் சீரற்ற இதயத்துடிப்பு (அரித்மியா) மற்றும் இதய செயலிழப்பு குறித்த சிறப்பு மாநாடு நடந்தது.
அவசரநிலை மருத்துவ சிகிச்சை, மயக்கமருந்தியல் பிரிவுகளில் பயிலும் 200 முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பணியாற்றி வரும் மருத்துவர்கள் பங்கேற்றனர். இ.சி.ஜி., 'பேஸ்மேக்கர்', இதய செயலிழப்பு, மின் உடலியங்கியல் ஆய்வுகள் குறித்து 10 சிறப்பு நிபுணர்களின் விவாதம் நடந்தது.
மாநாட்டின் அமைப்பு குழு செயலாளர் டாக்டர் ஜெயபாண்டியன் பேசியதாவது: சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை இதயநோய்க்கான முக்கிய காரணிகள். இதய நோயால் ஏற்படும் ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதத்தில், திடீர் இதய உயிரிழப்பின் சீரற்ற இதயத்துடிப்பு காரணங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
கரோனரித் தமனி நோய்கள் (சி.ஏ.டி.,) உடன் ஒப்பிடுகையில் சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இச்சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் இதுகுறித்து தங்களது நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மேம்பட்ட சிகிச்சை வழங்குவதற்காக மாநாடு நடத்தப்பட்டது என்றார்.