ADDED : ஏப் 10, 2026 11:05 PM
மதுரை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, மதுரை மருத்துவ கல்லுாரி கலையரங்கில் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
மாவட்டத்தில் 327 பதற்றமான ஓட்டுச்சாவடிகள், 12 மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 389 ஓட்டுச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் 400க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இவர்கள் நிலைமையை உற்றுக் கவனித்து பொதுப் பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டளிப்போர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அப்பகுதியின் சூழலை கேமரா போல இருந்து கண்காணித்து, மாலையில் பொதுப் பார்வையாளரிடம் மட்டுமே அறிக்கையாக தாக்கல் செய்வர்.
இவர்களுக்காக நடந்த பயிற்சி வகுப்பில் பொதுப் பார்வையாளர்கள் சமர்த்வர்மா, வேத்பதி மிஸ்ரா, அந்தரா ஆச்சார்யா, தினேஷ்குமார், மிங்மா டி ஷெர்பா ஆகியோர் பங்கேற்றனர்.
ஓட்டுச்சாவடியில் நுண்பார்வையாளர்கள் முழுநேரமும் இருக்க வேண்டிய அவசியம், ஓட்டுப்பதிவுக்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு (மாக் போல்) செயல்முறைகள், மின்னணு ஓட்டு இயந்திரம், வி.வி.பேட் இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்..
அசாதாரண நிகழ்வுகள், முறைகேடுகள் நடக்கிறதா என கண்டறிய வேண்டும். வாக்காளர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பிரவீன்குமார், டி.ஆர்.ஓ., க்கள் அன்பழகன், சக்திவேல், தேர்தல் உதவியாளர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
