/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஞ்சி மகாபெரியவருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி
/
காஞ்சி மகாபெரியவருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி
ADDED : ஜூலை 11, 2025 02:34 PM

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத்துவமானதாக கருதப்படுகிறது. இதனை, 'குரு பூர்ணிமா' என சாஸ்திரங்கள் சிறப்பித்து போற்றுகின்றன. குரு வழிபாட்டுக்கு உகந்த நன்னாள் இது. மகத்துவமான குரு பூர்ணிமா தினத்தை ஒட்டி, எஸ்.எஸ் காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில், சிறப்பு புஷ்பாஞ்சலி மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் விக்ரகம் மற்றும் அவர் பயன்படுத்திய பாதுகைகள் இங்கு உள்ளன.
சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகை மற்றும் இதர தெய்வங்களுக்கு புஷ்பாஞ்சலி செய்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

