ADDED : ஆக 20, 2025 01:40 AM

அலங்காநல்லுார்; மதுரை மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 25 குழந்தைகள் பயில்கின்றனர். மேலும் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் என அதிகமானோர் இணை உணவு, ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைகின்றனர்.
இப்பள்ளி அருகே கண்மாய் கரை உள்ளதால் ஊற்று ஏற்பட்டு அங்கன்வாடி மையம் முன் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. தொடர்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். பள்ளி வளாகத்தை சுற்றி 80 சதவீதம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் பழுதடைந்த சுவர் இடியும் நிலையில் உள்ளது.
அங்கன்வாடி மையம் முன் மண்ணைக் கொட்டி உயர்த்தி அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மழை நேரங்களில் தண்ணீர் அதிகரிக்கிறது. தேங்கும் நீர் வெளியேற வேண்டிய கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விஷப் பூச்சிகள் அச்சுறுத்துகின்றன.
பள்ளி அருகே இடிக்கவுள்ள வி.ஏ.ஓ., கால்நடை, சுய உதவிக் குழு கட்டட இடிபாடுகளை அங்கன்வாடி முன் கொட்டி தண்ணீர் தேங்காதவாறு பாதுகாக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.