/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'உங்களுடன் ஸ்டாலின்' மதுரையில் துவக்கம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' மதுரையில் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:49 AM

மதுரை : மதுரை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
மதுரை மேற்கு ஒன்றியம் செட்டிக்குளத்தில் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி, அரங்குகளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது: பொது மக்கள் குறைகளை வீடுகளுக்கே சென்று கேட்டறிந்து தீர்வு காண இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் செட்டிக்குளம், ஆலத்துார் மக்கள் பங்கேற்றுள்ளனர். நகர்ப்புற பகுதியில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள், ஊரக பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் அளிக்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 347 முகாம்கள் நடக்க உள்ளன என்றார்.
கலெக்டர் பிரவீன்குமார் கூறுகையில், ''இம்முகாம்களில் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியுள்ள விடுபட்ட பெண்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படும். அதனை அங்குள்ள கவுன்டரில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்'' என்றார். டி.ஆர்.ஓ., அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த், சமூகபாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கார்த்திகாயினி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒத்தக்கடை, மேலுார் நிகழ்ச்சியிலும் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன் குமார் பங்கேற்றனர். வருவாய், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். பிறப்பு சான்றிதழ், சொத்துவரி பெயர் மாற்ற மனுக்களுக்கு உடனே தீர்வு காண உத்தரவிட்டனர். மேலுார் நகர கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.6 லட்சம், கிடாரிப்பட்டி மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.51.75 லட்சம் கடன் வழங்க உத்தரவிட்டனர்.
ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார்கள் செந்தாமரை, லயனல் ராஜ்குமார், நகராட்சி தலைவர் முகமது யாசின் பங்கேற்றனர்.