/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை
/
உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை
ADDED : டிச 17, 2024 04:16 AM

மதுரை: மதுரையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற பெண் பிரியா 43, மூளைச்சாவு அடைந்ததால் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடல் அரசு மரியாதைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.
மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த்பாபு. சவுதி அரேபியாவில் பணிபுரிகிறார். இவரது மனைவி பிரியா. இத்தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டிச.,13ல் திருக்கார்த்திகை நாளில் விளக்கேற்றுவதற்காக எண்ணெய் வாங்க கடைக்குச் சென்றவர் மீது ஆட்டோ மோதியது. பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஆட்டோ டிரைவர் தலைமறைவானார். விசாரித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேல் சிகிச்சைக்காக பிரியாவை உறவினர்கள் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். கோமா நிலையில் சிகிச்சை பெற்ற அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.
அவரது உறுப்புகள் தேவைப்படும் பிற நோயாளிகளுக்கு தானம் செய்யப்பட்டது.
உறுப்புதானம் செய்த அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகம் அரசு மரியாதை வழங்கியது. மேலுார் ஆர்.டி.ஓ., கார்த்திகாயினி, பா.ஜ.,வை சேர்ந்த சசிகுமார் உட்பட பொதுமக்கள் பிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.