20 ஆண்டுக்குப் பின் பள்ளியை சுத்தப்படுத்திய மாணவர்கள்
20 ஆண்டுக்குப் பின் பள்ளியை சுத்தப்படுத்திய மாணவர்கள்
ADDED : டிச 30, 2024 07:01 AM

மதுரை: மதுரை யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2003 - 2005 ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சமீபத்தில் மீண்டும் பள்ளியில் சந்தித்தனர்.
'எங்கள் பள்ளி, மிளிரும் அரசுப் பள்ளி' என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பள்ளியில் கூடினர். இருபது ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட இம்மாணவர்கள் படித்த காலத்தை மீண்டும் நினைவு கூர்ந்தனர். அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளியை துாய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் கஸ்துாரி, சுதாமதி, பேபிராணி, சின்னக்கருப்பன் ஆகியோரை கவுரவித்தனர்.
7 ஆசிரியர்களின் புகைப்படத்தை அச்சிட்ட காலண்டர்களை மாணவர்களுக்கு வினியோகித்தனர். வாட்ஸ் ஆப் குழு துவக்கி, 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி குடும்ப சகிதமாக பங்கேற்று, மரக்கன்று நட்டனர். சிறுவிளையாட்டு போட்டிகள் நடத்தி, சமத்துவ பொங்கல் வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ராஜ்குமார், பாண்டியன் செய்திருந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணகுமார், ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி, ஓய்வு பெற்ற உதவியாளர் பாக்கியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
