சும்மா கிடக்கும் இயந்திரம்; குடிநீருக்காக ஏங்கும் மாணவர்கள்
சும்மா கிடக்கும் இயந்திரம்; குடிநீருக்காக ஏங்கும் மாணவர்கள்
ADDED : பிப் 23, 2026 05:35 AM

மேலுார்: கச்சிராயன்பட்டி துவக்கப்பள்ளியில் ஆழ்குழாய் நீரை குடிநீராக பயன்படுத்தும் மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.
நுாற்றாண்டு கண்ட இப்பள்ளியில் பரம நாதபுரம், வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கான போர்வெல் பராமரிப்பின்றி பழுதானது.
மேல்நிலைத் தொட்டியில் இருந்து பள்ளிக்கு கொடுக்கப்பட்ட குழாயில் வரும் தண்ணீர் பள்ளி துவங்கும் முன் நின்று விடும். அதனால் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
பெற்றோர் கூறியதாவது: ஓராண்டாக சுத்திகரிப்பு இயந்திரம் ஊராட்சி அலுவலகத்தில் காட்சிப் பொருளாக வீணாகிறது. மாணவர்கள் ஆழ்குழாய் நீரை குடிநீராக பயன்படுத்துவதால் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பி.டி.ஓ., சங்கர் கைலாசத்திடம் முறையிடவே பள்ளி அருகில் உள்ள போர்வெல்லை பழுது நீக்கி சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி செயலரிடம் கூறினார். ஆனால் இன்று வரை சரிசெய்யவில்லை என்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளியில் ஒருமுனை இணைப்பு மின்சாரம் மட்டுமே உள்ளது. ஆனால் சுத்திகரிப்பு இயந்திரம் மும்முனை இணைப்பில் மட்டுமே செயல்படும் என்பதால் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஆகிறது என்றனர்.
