ADDED : செப் 20, 2026 02:56 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விவசாயிகள் குறுகிய காலப்பயிர்களான சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியம் அல்லது உளுந்து, பாசிப்பயறு, தட்டை உள்ளிட்ட பயறுவகைகளை சாகுபடி செய்யலாம்'' என வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் குறைவான மழை பெய்தாலும் குறுகிய காலப்பயிர்களான சிறு தானியப்பயிர்கள் அல்லது உளுந்து, பாசிப்பயறு, தட்டை உள்ளிட்ட பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யலாம். சிறு தானிய இயக்கம் திட்டம் சார்பில் மாற்றுப்பயிராக சோளம் சாகுபடி செய்வோருக்கு விதை, நுண்ணுாட்ட உரம், திரவ உயிர் உரம், சூடோமோனாஸ் உள்ளிட்டவற்றுடன், அறுவடை கூலி மானியமும் சேர்த்து, ஏக்கருக்கு ரூ.1250 மானியம் வழங்கப்படும். குறுந்தானிய பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க குதிரைவாலி விதை 'மினி கிட்' இலவசமாக வழங்கப்படும்.
மேலும் வரகு, தினை, குதிரைவாலி போன்ற குறுந்தானியப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடை நேர்த்தி செலவுக்காக எக்டேருக்கு ரூ. 8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் சிட்டா, ஆதார், வங்கி பாஸ்புக் நகலுடன் திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றார்.
