/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சூப்பர் பட்ஜெட்… சுமார் பட்ஜெட்… எதிர்பார்த்த பட்ஜெட்... ஏமாற்ற பட்ஜெட்
/
சூப்பர் பட்ஜெட்… சுமார் பட்ஜெட்… எதிர்பார்த்த பட்ஜெட்... ஏமாற்ற பட்ஜெட்
சூப்பர் பட்ஜெட்… சுமார் பட்ஜெட்… எதிர்பார்த்த பட்ஜெட்... ஏமாற்ற பட்ஜெட்
சூப்பர் பட்ஜெட்… சுமார் பட்ஜெட்… எதிர்பார்த்த பட்ஜெட்... ஏமாற்ற பட்ஜெட்
ADDED : பிப் 02, 2025 04:10 AM

கிசான் கடன் அட்டை வரம்பை வரவேற்கி றோம்
பெருமாள், தேசியத் துணைத் தலைவர், பாரதிய கிசான் சங்கம்: விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் உச்ச வரம்பை ரூ.3லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியதால் 7.7 கோடி விவசாயிகள் பயன் அடைவர். யூரியா உற்பத்தியில் தன்னிறைவு (ஆத்மநிர்பார் ) அடையும் வகையில் அசாமில் 12.7 லட்சம் டன் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதை வரவேற்கிறோம். பிரதமரின் கிசான் தொகையை அதிகப்படுத்தாதது, விவசாய இடுபொருளுக்கு ஜி.எஸ்.டி., வரி ரத்து செய்யாதது, மற்ற விவசாய விளை பொருட்களுக்கு வாரியம் அமைக்காதது ஏமாற்றமளிக்கிறது.
வளர்ச்சியை நோக்கி செல்லும் பட்ஜெட்
குமார், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்: மொத்தத்தில் தொழில் வளர்ச்சியை நோக்கி செல்லும் பட்ஜெட்டாகவே பார்க்கிறோம். தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது நல்ல விஷயம். இதுவரை வரித்தொகையை செலுத்தியவர்கள் இனி உள்ளூரில் ஓட்டல், ஜவுளித் தொழில்களில் தாராளமாக செலவிடுவர் என்பதால் உள்ளூர் பொருளாதாரம் அதிகரிக்கும். மக்களிடமும் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
விவசாயத்தை அழிப்பதற்கான வெளிநாட்டு சதி
ராமன், மாநில கவுரவ தலைவர், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு: விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் மூன்றாண்டுகளாக போராடியும் அறிவிக்கவில்லை. ஒரு கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயன் அடைவர் என்று பொத்தாம் பொதுவான அறிவிப்பாக உள்ளதே தவிர எந்தெந்த விதமான திட்டம் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பயிர்க்காப்பீடு இதுவரை 50 சதவீதம் தான் தனியாரிடம் இருந்தது. பயிர்கள் பாதிக்கப்பட்டால் தற்போது வரை இழப்பீட்டு தொகை பெற போராடி வருகிறோம். தற்போது 100 சதவீதம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் எப்படி நாங்கள் முறையிடுவது. விவசாயத்தை நசுக்கி விவசாயிகளை அழிப்பதற்கான வெளிநாட்டு சதி என்று சொல்வதை தவிர வேறில்லை.
புதிய ரயில் திட்டம் இல்லை
திருமுருகன், மாநில தலைவர், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம்: உத்தரபிரதேசம், பீஹாருக்கு கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் தமிழகத்திற்கான திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடு, மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்கள் ஆகியவை இடம்பெறவில்லை. நிலுவையில் உள்ள திட்டம், பழைய தொழில்துறை திட்டங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்படலாம். உள்நாட்டு உற்பத்தி விலையேற்றம் கச்சா பொருட்களின் மீது வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி செலவு உயரும் போது விலையேற்றம் ஏற்படலாம்.
திருமுருகன்
-நமது நிருபர் குழு-