/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோலைமலையில் இன்று சூரசம்ஹாரம் நாளை திருக்கல்யாணம்
/
சோலைமலையில் இன்று சூரசம்ஹாரம் நாளை திருக்கல்யாணம்
ADDED : நவ 07, 2024 02:25 AM
அழகர்கோவில்: ஆறாம் படை வீடான அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
விழாவின் முக்கிய தினமான இன்று (நவ. 7) காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை முடிந்த பின் காலை 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பாடாகிறார். மாலை 4:00 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை 4:15 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி கோயிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகா சூரனையும் வதம் செய்கிறார்.
மாலை 5:30 மணிக்கு தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை வதம் செய்கிறார். மாலை 6:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகம், தீபாராதனை செய்து, அவ்வைக்கு நாவல் கனி கொடுத்த வரலாற்றை குறிக்கும் வகையில் சந்தன அலங்காரம் செய்யப்படுகிறது.
நாளை (நவ.8) காலை 6:30 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். காலை 11:30 மணிக்கு உற்ஸவருக்கு அபிஷேகம், அன்ன பாவாடை தரிசனம் முடிந்து அலங்கார பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவம் முடிந்து ஆறுபடை வீடு முருகன் அலங்கார தரிசனத்துடன் விழா நிறைவடையும். மாலை 6:00 மணிக்கு தங்கரத உலா நடக்கிறது.