/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றது தமிழகம் ஏற்றுமதி மாநாட்டில் தகவல்
/
ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றது தமிழகம் ஏற்றுமதி மாநாட்டில் தகவல்
ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றது தமிழகம் ஏற்றுமதி மாநாட்டில் தகவல்
ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றது தமிழகம் ஏற்றுமதி மாநாட்டில் தகவல்
ADDED : டிச 14, 2025 06:47 AM
மதுரை: ''ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது'' என, மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் (இ.பி.சி.) நடத்திய ஏற்றுமதி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இ.பி.சி., சேர்மன் ராஜமூர்த்தி வரவேற்றார். துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மியான்மர் நாட்டின் கவுரவ துாதர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொழில்வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசியதாவது:
இந்தியாவின் 2024 - 25க்கான ஜி.டி.பி., ரூ.330.68 லட்சம் கோடி. கடந்தாண்டு 9.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
பிரதமர் மோடியின் இலக்கு ரூ.450 லட்சம் கோடியாக உள்ளது. 2028 ல் இந்த இலக்கை அடைந்து விடுவோம். உலகளவில் 4வது பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. அடுத்தாண்டு ஜெர்மனியை தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறி விடுவோம். இந்தியாவில் ஒரு லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் தான் 10ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
இந்தியாவில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வரிசையில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. 8000க்கும் அதிகமான பொருட்களை எம்.எஸ்.எம்.இ., துறையினர் உற்பத்தி செய்கின்றனர். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 9 சதவீத பங்குடன் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி தொழில்கள் 33 சதவீதம், விவசாயம் 13 சதவீதம், சேவைத்தொழில்கள் 54 சதவீதம் குறிப்பாக சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தற்போது உற்பத்தி துறையில் தமிழகம் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி.) தமிழகம் 2ம் இடத்தில் இருந்தாலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ள கர்நாடகா, உ.பி., குஜராத்திற்கான வித்தியாசம் ஒரு சதவீத அளவே உள்ளது. இந்த மாநில அரசுகள் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் தமிழகத்தை விரைவில் முந்தும் வாய்ப்புள்ளது.
ஏற்றுமதி அளவைக் கணக்கிட்டால் 2024 - 25 ல் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கே உள்ளது. தென்தமிழகத்தில் உணவுப்பொருட்கள், கடல் மீன், இறால்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புள்ளது. அதை புதிய தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
எஸ்.இ.பி.சி., மண்டல இயக்குநர் விவேக் பக்ஸி, எக்ஸிம் வங்கி துணைப்பொதுமேலாளர் சுகந்தி, எக்ஸல் குழுமத்தலைவர் முருகானந்தம், அடையாறு ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய ஏற்றுமதியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

