ADDED : டிச 22, 2024 07:51 AM
மதுரை : 'மாணவர்கள் கட்டாயம் இரண்டாம் மொழியாக தொடக்கக் கல்லுாரி வரை தமிழ்மொழி பயில வேண்டும்' என தமிழ் வளர்ச்சித் துறையின் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் கணேஷ்பாபு பேசுகையில், ''சங்க காலம் தொடங்கி இப்போது வரை நாடகம் அழிக்க முடியாத கலையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. உலகெங்கும் மேடை நாடகங்களுக்கு வரவேற்பு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தாலும் நாடகம் எனும் கலை வடிவம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்'' என்றார்.
சிங்கப்பூர் கல்வி ஆசிரியர் அர்ச்சுனன் பேசுகையில், ''உலகில் தமிழ்மொழி பல்வேறு நாடுகளில் கோலோச்சுகிறது. சிங்கப்பூரில் ஆட்சிமொழியாக விளங்கும் தமிழ்மொழியை தமிழ் மாணவர்கள் கட்டாயம் இரண்டாம் மொழியாக தொடக்கக் கல்லூரி வரை பயில வேண்டும்'' என்றார்.
இணை இயக்குநர் ராஜகம்பீரன் அப்பாஸ், பொதிகை தமிழ்ச் சங்கத்தலைவர் ராஜேந்திரன், எழுத்தாளர்கள் அருணை மதன்குமார், வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினர். தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.