ADDED : மார் 26, 2026 06:33 PM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் ரூ. 41.89 கோடியில் அமைத்த புதிய தார்ச்சாலை ஐந்தே மாதங்களில் சேதமடைந்து விட்டது.
திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டையொட்டிய தென்கால் கண்மாய் கரையோரம் நெடுஞ்சாலை துறை சார்பில் 1.20 கி.மீ.,க்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக கரையின் உட்புறம் 9.5 மீ., உயர தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. புதிய ரோடு 7.5 மீ., அகலத்திலும், இடது புறம் நடைமேடையும் அமைக்கப்பட்டது. வலது புறம் செடிகள் வளர்க்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் 79 மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
நவ. 1ல் இந்த புதிய தார் சாலையை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். ஐந்தே மாதங்களில் இந்த சாலையில் மூலக்கரை அருகே பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. மேலும் பல இடங்களில் சேதம் அடைந்து வருகிறது. விரையும் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். இரவு நேரம் பலர் விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலை அமைக்கும் போதே பல இடங்களில் சேதமடைந்தது. திறப்பு விழாவுக்கு முன்பே அது சரி செய்யப்பட்டது. தரமற்ற பணியால்தான் இப்படி உடனுக்குடன் சேதமடைவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். ரோட்டை சீரமைக்க அவசர நடவடிக்கை தேவை.
