/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் சொத்து வாடகை வசூல்; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழக்கு
/
கோயில் சொத்து வாடகை வசூல்; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழக்கு
கோயில் சொத்து வாடகை வசூல்; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழக்கு
கோயில் சொத்து வாடகை வசூல்; சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழக்கு
ADDED : ஜூலை 10, 2025 07:21 AM
மதுரை : கோயில் சொத்துக்களுக்கு வாடகை வசூல் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்டந்தோறும் சிவில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக கோயில்களுக்குச் சொந்தமாக நிலம், கட்டடங்கள், கடைகள் உட்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இவற்றை அனுபவித்து வருவோரில் சிலர் முறையாக வாடகை செலுத்துவதில்லை. சம்பந்தப்பட்ட சில அலுவலர்கள் வாடகையை முறையாக வசூலிப்பதில்லை.
இது தொடர்பான வழக்குகள் அறநிலையத்துறை இணை கமிஷனர் தலைமையிலான நீதிமன்றங்கள், வருவாய்த்துறை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன.
அறநிலையத்துறை நீதிமன்றங்களில் வாரத்தில் ஒருநாள் விசாரணை நடக்கிறது. இதனால் வழக்குகள் தேங்குகின்றன. கோயில் சொத்துக்களுக்கு வாடகை வசூல் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்டந்தோறும் சிவில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
நிலுவையிலுள்ள கோயில் சொத்து வாடகை மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்னை தொடர்பான வழக்குகளை, சிவில் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கோரி தமிழக தலைமைச் செயலர், அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. அரசு பிளீடர் திலக்குமார், சிறப்பு பிளீடர் சுப்பாராஜ், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பு வழக்கறிஞர் சிவராமன் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கோரும் நிவாரணம் ஏற்புடையதல்ல. இது நிர்வாக ரீதியாக முடிவு செய்யப்பட வேண்டியது. அரசின் ஒப்புதல் தேவை. இந்நீதிமன்ற அதிகாரங்களை பயன்படுத்தி, இத்தகைய பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.