ADDED : பிப் 27, 2026 05:49 AM
மதுரை: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கல் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் மேம்படுத்த ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி நாகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமையான 'கன்னியம்பலம்' என்ற பெயரில் கல் மண்டபம் உள்ளது. அது நம் முன்னோர்களின் கட்டடக் கலைக்கு சான்று. திருவிழா காலங்களில் காலை, மாலையில் வீதி உலாவின்போது பகவதி அம்மன் கல் மண்டபத்திற்கு வந்து செல்வது வழக்கம். கல் மண்டபத்தின் துாண், தரையை சேதப்படுத்தி கோயில் நிர்வாகம் கடைகள் அமைத்துள்ளது. குப்பை தேங்கியுள்ளது. மண்டபத்திலுள்ள விநாயகர் கோயிலை சரியாக பராமரிக்கவில்லை.
குப்பை, கடைகளை அகற்ற நடவடிக்கை கோரி அறநிலையத்துறை கமிஷனர், சுசீந்திரம் இணை கமிஷனர், கோயில் மேலாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.ராமு ஆஜரானார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன்: கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் மேம்படுத்த அறநிலையத்துறை கமிஷனர் அதே துறையின் கீழுள்ள தொல்லியல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மார்ச் 4ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
