/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
3 மடங்கு அபராதம் புதிய உத்தரவால் ரூ.பல கோடி மதிப்பு பொருட்கள் 'ரிட்டர்ன்'
/
3 மடங்கு அபராதம் புதிய உத்தரவால் ரூ.பல கோடி மதிப்பு பொருட்கள் 'ரிட்டர்ன்'
3 மடங்கு அபராதம் புதிய உத்தரவால் ரூ.பல கோடி மதிப்பு பொருட்கள் 'ரிட்டர்ன்'
3 மடங்கு அபராதம் புதிய உத்தரவால் ரூ.பல கோடி மதிப்பு பொருட்கள் 'ரிட்டர்ன்'
UPDATED : பிப் 01, 2024 08:45 AM
ADDED : பிப் 01, 2024 07:27 AM

மதுரை : உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் அதற்குரிய தொகையை செலுத்தாவிட்டால் 3 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய உத்தரவால் ரூ.பல கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தியாளர்களுக்கு வியாபாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மத்திய அரசின் சிறுகுறுந்தொழில் நிறுவனத்தில் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவுபடி உற்பத்தியாளர் விற்கும் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் 45 நாட்களுக்குள் அதற்குரிய தொகையை செலுத்திவிட வேண்டும். இல்லாதபட்சத்தில் 46 வது நாளில் இருந்து 3 மடங்கு வரை அபராதம் உற்பத்தியாளருக்கு வியாபாரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவால் உற்பத்தியாளர், விற்பனையாளர் இடையேயான வர்த்தக உறவு பாதிக்கும் என இருதரப்பும் அச்சத்தில் உள்ளனர்.
சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு ஜவுளி வியாபாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
நமது நிருபரிடம் மாநில செயலாளர் அஷ்ரப்யூசுப் கூறியதாவது:
நம்பிக்கை அடிப்படையிலான வர்த்தக உறவு என்பது காலம் காலமாக இருந்து வருவது. புதிய உத்தரவால் 45 நாட்களுக்குள் பொருட்களுக்குரிய தொகையை செலுத்திவிட வேண்டும். இல்லாதபட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்தாண்டு ஏப்.,1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது டெக்ஸ்டைல் தொழிலுக்கு மட்டுமல்ல. அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும்.
சமீபகாலமாக உத்தரவை அமல்படுத்த நெருக்கடி தரப்படுகிறது.
கைவசம் பொருட்கள் இருந்தால் அதற்குரிய மதிப்பை தணிக்கை ஆய்வில் காண்பிக்க வேண்டியிருக்கும் அல்லது அந்த பொருட்களுக்குரிய தொகையை இன்னும் உற்பத்தியாளருக்கு தரவில்லை எனச்சொன்னால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இந்த நெருக்கடியால் தற்போது ரூ.பல கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தியாளர்களுக்கு வியாபாரிகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். இது உற்பத்தியை கடுமையாக பாதிக்கும்.
இவ்வாறு கூறினார்.