/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனைத்து வீடுகளிலும் இடம்பெற வேண்டியது 'நுரையீரல் அறிந்ததும் அறியாததும்' புத்தகம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
/
அனைத்து வீடுகளிலும் இடம்பெற வேண்டியது 'நுரையீரல் அறிந்ததும் அறியாததும்' புத்தகம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
அனைத்து வீடுகளிலும் இடம்பெற வேண்டியது 'நுரையீரல் அறிந்ததும் அறியாததும்' புத்தகம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
அனைத்து வீடுகளிலும் இடம்பெற வேண்டியது 'நுரையீரல் அறிந்ததும் அறியாததும்' புத்தகம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
UPDATED : டிச 08, 2024 12:23 PM
ADDED : டிச 08, 2024 10:19 AM

மதுரை ; ''தாமரை பிரதர்ஸ் மீடியா லிட்., வெளியீடான டாக்டர் மா.பழனியப்பன் எழுதிய 'நுரையீரல் அறிந்ததும் அறியாததும்' விழிப்புணர்வு புத்தகம் அனைத்து வீடுகளிலும் இடம் பெற வேண்டியது'' என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் நடந்த வெளியீட்டு விழாவில் பேசினார்.
அப்போலோ மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் மீனா பிரியதர்ஷனி வரவேற்றார். புத்தகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். முதல் பிரதியை உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் பேசியதாவது: நுரையீரல் சம்பந்தமான பல பிரச்னைகள் எப்படி வருகிறது, அதற்கான தடுப்பு முறைகள், மாத்திரைகள் உட்கொள்வது பற்றி மக்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் டாக்டர் பழனியப்பன் எழுதிய தொடர்கள், கேள்வி, பதில்கள் 'தினமலர்' நாளிதழில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளியானது.
அவற்றை தொகுத்து புத்தகமாக தாமரை பிரதர்ஸ் மீடியா லிட்., சிறப்பாக வெளியிட்டுள்ளது. சாதாரண சந்தேகங்களுக்கும் அற்புதமான பதில் இடம் பெற்றுள்ளது. வரக்கூடிய பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறது. கண், இதயத்திற்கு முக்கியத்துவம் அளித்து கவிஞர்கள் வர்ணித்துள்ளனர். நுரையீரல் பற்றி யாரும் பெரிதாக கருதுவதில்லை. கவிஞர்களால் ஒதுக்கப்பட்டது நுரையீரல். இதயம் அருகே உள்ள ஒதுக்கப்பட்ட நுரையீரல் பற்றி தனி விழிப்புணர்வு புத்தகம் வெளிவந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது என்றார்.
பழ.நெடுமாறன் பேசியதாவது: உலகில் மாசுபடுதலால் மரணங்கள் அதிகரிக்கின்றன. காற்று மாசுபடுவதற்கு தீர்வு காண எத்தகைய முடிவும் எட்ட முடியாமல் உலக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இது நீடித்தால் எதிர்காலம் பாதிக்கும்.
வளர்ந்த நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசு உலகை பாதிக்கிறது. நோய்க்கு மூல காரணம் காற்று மாசுதான். நோயின் தன்மை, யார், யாருக்கு வரும், அதற்கு தீர்வு குறித்து இனிய தமிழில் இப்புத்தகம் வெளியாகியுள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
பெருமைகொள்கிறோம்
தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: நுரையீரல் பாதிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா காலகட்டத்தில் பலர் இறந்தனர். நுரையீரலின் முக்கியத்துவம் அக்கால கட்டத்தில்தான் தெரியவந்தது.
காற்று மாசுபடுவதை தடுக்க நம்மால் முடியும். எளிய நடையில் கட்டுரை, கேள்வி பதில்கள் இப்புத்தகத்தில் வெளிவந்துள்ளன. இதுபோன்ற நுால்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
நுாலாசிரியர் டாக்டர் மா.பழனியப்பன் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் துறை உருவானது.
அப்போது படித்துவிட்டு மதுரையில் முதன்முறையாக மருத்துவ தொழிலை துவக்கினேன். நுரையீரல் சம்பந்தமான புது கருவிகள் வந்தன. புது நோய்களை கண்டறிய முடிந்தது. 'தினமலர்' நாளிதழில் வெளியான எனது கட்டுரை, கேள்வி, பதில்கள் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்தது.
இந்நுால் வெளியாக காரணமான தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் எல்.ராமசுப்புவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா, வேலம்மாள் மருத்துவமனை மற்றும் குழுமம் தலைவர் முத்து ராமலிங்கம், மதுரை மண்டல அப்போலோ மருத்துவமனை சி.ஓ.ஓ., நீலகண்ணன், மாணிக்கம் தாகூர் எம்.பி., உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், அரவிந்த் கண் மருத்துவமனை குழுமம் தலைவர் ரவீந்திரன், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை முதன்மை டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், தமிழறிஞர் விநாயக ஷண்முகசுந்தரி, தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ்குமார் ஆகியோர் பேசினர்.