/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சவாலே சமாளி...: பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்: காட்டுப்பன்றிகளை கையாள 'நாற்ற யுக்தி'
/
சவாலே சமாளி...: பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்: காட்டுப்பன்றிகளை கையாள 'நாற்ற யுக்தி'
சவாலே சமாளி...: பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்: காட்டுப்பன்றிகளை கையாள 'நாற்ற யுக்தி'
சவாலே சமாளி...: பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்: காட்டுப்பன்றிகளை கையாள 'நாற்ற யுக்தி'
ADDED : ஆக 01, 2025 02:17 AM

மதுரை: மதுரை மலையடிவாரப்பகுதிகளில் வனவிலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பொருளாதார சேதம் அதிகம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரிட்டாபட்டி, பெருமாள் மலை, புதுத் தாமரைப்பட்டி, மேலமாத்துார், வடபழஞ்சி, தனிச்சியம், மேலக்கால் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிகமாக நடமாடுகின்றன. கண்மாய்களில் தண்ணீரின்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்திருந்தால் இவை அங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து அருகிலுள்ள வயல்களை கபளீகரம் செய்கின்றன.
காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்பதால் ஏற்படும் சேதத்தை விட, மண்ணை கிளறும் போதுதான் அதிக சேதம் ஏற்படுகிறது. காட்டுப் பன்றிகளுக்கு கேட்கும் திறன் குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்டுதல் முயற்சி பயனளிப்பதில்லை என்கின்றனர் விவசாயிகள்.
இதற்கான தீர்வு குறித்து கொட்டாம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் அருள்மணி கூறியதாவது: விளைநிலத்தை சுற்றி சூரிய மின்வேலி அமைத்தால் அதில் இருந்து வரும் அதிர்வுகளால் காட்டுப்பன்றிகள் திரும்பவும் வராது. வயலைச் சுற்றி 3 அடி அகலம், 2 அடி ஆழத்தில் கால்வாய் வெட்டலாம்.
நான்கு முதல் 5 வரிசையில் ஆமணக்கு செடிகளை அடர் நடவு செய்தால் இதில் வெளியாகும் வாசனை காட்டுப்பன்றியை தடுக்கும். அழுகிய கோழி, மீன் இறைச்சி கழிவுகளை, பொடிப் பொடியாக நறுக்கி முடிகளுடன் கலந்து ஆங்காங்கே வைக்க வேண்டும். பன்றிகள் பயிர்களை முண்டும் போது தலைமுடி துகள்கள் மூக்கில் சிக்கும். நாட்டுப் பன்றிச் சாணத்தை வரப்போரம் வைத்தால் இதன் துர்நாற்றம் அவற்றை தடுத்து நிறுத்தும். அந்த சாணத்தை காய வைத்து சட்டியில் இட்டு இரவில் புகை மூட்டலாம். வண்ணச் சேலைகளை வயலைச் சுற்றி கட்டினாலும் மனித நடமாட்டம் இருப்பதாக நினைத்து வராது. வனப்பகுதி அருகே சாகுபடி நிலம் இருந்தால் 2 மீட்டர் வளரும் சப்பாத்திக்கள்ளி செடியை நெருக்கமாக நடவு செய்தாலும் அவை வராது. பத்து லிட்டர் தண்ணீரில் 3 முட்டைகளை கலந்து வயலைச் சுற்றி ஒரு மீட்டர் அகலத்திற்கு தெளித்தாலும் துர்நாற்றத்தை தாண்டி வராது. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விற்கும் தாவர காட்டுப் பன்றி விரட்டியை ஏக்கருக்கு 500 மில்லி பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு கூறினார்.

