/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'விழா நாளிலும் விழுமிய சேவை மகிழ்வையே தரும்' தீபாவளியில் பணியாற்றிய ஊழியர்கள் நெகிழ்ச்சி
/
'விழா நாளிலும் விழுமிய சேவை மகிழ்வையே தரும்' தீபாவளியில் பணியாற்றிய ஊழியர்கள் நெகிழ்ச்சி
'விழா நாளிலும் விழுமிய சேவை மகிழ்வையே தரும்' தீபாவளியில் பணியாற்றிய ஊழியர்கள் நெகிழ்ச்சி
'விழா நாளிலும் விழுமிய சேவை மகிழ்வையே தரும்' தீபாவளியில் பணியாற்றிய ஊழியர்கள் நெகிழ்ச்சி
ADDED : நவ 01, 2024 05:17 AM

மறக்க முடியாத சேவை
-டாக்டர் காமாட்சி சங்கர், அரசு மருத்துவமனை, மதுரை: தீபாவளியின்போதுதான் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பட்டாசு, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் அதிகமாக சிகிச்சைக்கு வருவர். உயிர்காக்கும் பணியில் உள்ளதால் விடுமுறையை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியின்போது விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டேன். அவர்கள் உயிர் பிழைத்து 100 சதவீதம் குணமாகினர். அதை பார்த்து மகிழ்ச்சியடைந்த தருணத்தை மறக்கவே முடியாது.
பெருமையான வாய்ப்பு
முருகன், போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., கரிமேடு: வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு காலை 10:00 மணிக்கு பணிக்கு வந்தேன். மீண்டும் பணி முடிந்து சென்று தீபாவளி கொண்டாடுவேன். குடும்பத்தினருடன் போலீசார் தீபாவளியை கொண்டாடும் வகையில் உயரதிகாரிகள் பணி ஒதுக்கீடு செய்தனர். தீபாவளியையொட்டி 15 நாட்களாக கடைகளில் வியாபாரம் களைகட்டியது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினோம். மக்கள் பொருட்களை வாங்கி பிரச்னையின்றி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதை பார்க்கையில் எங்கள் பணி திருப்தியளிக்கிறது. தீபாவளியன்று பணி செய்வதை எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதுகிறேன்.
பொதுமக்கள் கவுரவம்
எஸ்.பழனிவேல், நடத்துனர், அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை: 27 ஆண்டுகளாக எல்லா விழா நாட்களிலும் பணியாற்றி வருகிறேன். இதற்காக விழாவை காலையிலேயே கொண்டாடிவிடுவேன். தலைத் தீபாவளியின்போதும் வீட்டில் இல்லாமல் பணிக்கு சென்றது குறித்து எனது மாமியார் கூட அதிருப்தியை தெரிவித்துள்ளார். சாதாரண நாட்களிலும் தேவையின்றி விடுப்பு எடுக்காமல் பணியாற்றுவது எனக்கு திருப்தியாக உள்ளது. இதுகுறித்து எனது குடும்பத்தினர் ஒருநாளும் என்னிடம் குறைபட்டதில்லை. விழா நாளில் வேலை செய்ததற்காக கடந்தாண்டு தாமரைப்பட்டியில் மக்கள் எனக்கு மாலை அணிவித்து கவுரவித்தது பெருமையாக உள்ளது.
பெருமை கொள்கிறேன்
-கணேசமூர்த்தி, ரயில் ஓட்டுநர், பரமக்குடி: நான், 12 ஆண்டுகளாக ரயில்வேயில் பணிபுரிகிறேன். ஆள்பற்றாக்குறையால் விடுமுறை கிடைப்பதில்லை. எனவே தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் வீட்டில் இருக்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்கிறேன்.குடும்பத்தை விட்டுவந்து பணி செய்தாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னிடம் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். என்னைப் போலவே ரயிலில் பயணிப்போரும் ஏதோ வேலையாக செல்கையில் அவர்களுக்கு உதவுவதில் மகிழ்கிறேன்.
பயணிகளின் பாதுகாப்பு முக்கியம்
-மணிமாறன், ரயில் மேலாளர், மதுரை: 2018 ல் சரக்கு ரயில் கார்டாக பணியில் சேர்ந்தேன். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பயணியர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவர். என்னைப் போன்றோர் பணிக்கு வரவில்லை என்றால், பயணியர் தங்களின் சொந்த ஊர்களுக்கு எப்படிச் செல்ல முடியும். அவர்களுக்கான சேவையை யார்தான் செய்வது. எனவே என்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு வந்தாலும், அவசியமானோருக்கு சேவை செய்வதை கடமையாக கருதுகிறேன். பயணிகளின் பாதுகாப்பே எனக்கு முக்கியம்.
செய்யும் பணியே தெய்வம்
ஜெயராணி,துாய்மை பணியாளர்: 13 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். எனக்கு ஒரு ஆண், இரு பெண் பிள்ளைகள். கணவர் ஆட்டோ ஓட்டுநர். எனக்கு குடும்பமும் பணியும் இரு கண்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் என்னால் சுதந்திரமாக பணி செய்ய முடிகிறது. இப்பணி மூலமே என் பிள்ளைகளை படிக்க வைத்தேன். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கோயிலுக்குச் சென்றுதான் சாமி கும்பிட வேண்டும் என்பதில்லை. பணி செய்யும் இடத்திலேயே என்னுடன் தெய்வம் உள்ளது.