/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயற்கை விவசாயத்தை கைவிட்ட விவசாயி வேதனை
/
இயற்கை விவசாயத்தை கைவிட்ட விவசாயி வேதனை
ADDED : பிப் 01, 2024 04:30 AM

பாலமேடு : பாலமேடு அருகே நாட்டு ரக விதைகள் கிடைக்காதது, விழிப்புணர்வு இல்லாத மக்களால் இயற்கை விவசாயத்தை கைவிட்ட விவசாயி, ரசாயன முறை சாகுபடிக்குமாறி காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்கிறார்.
டி.நாராயணபுரம் விவசாயி சின்னப்பாண்டி. இவர் கிணற்றுப் பாசனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு ரக கத்தரி, வெண்டைக்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு சந்தைக்கு நேரடியாக சென்று விற்று வந்தார்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்பதால், இவருக்கென சில ரெகுலர் வாடிக்கையாளர்கள் உருவாகி, சந்தையில் அவரைத் தேடி வந்து வாங்கி சென்றனர்.
இந்நிலையில் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காதது, விளைச்சல், விற்பனை குறைவால் மனம் நொந்தார். இதையடுத்து மீண்டும் ரசாயன முறை சாகுபடிக்கு மாறியதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''காய்கறிகள் 'பளிச்' என இருந்தால்தான் நல்ல பொருள் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அந்த ஒட்டுரக காய்கறிகளில் சத்துக்கள் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
எனவே இயற்கை காய்கறிகளின் அருமை மக்களுக்கு தெரியாததால் விலை அதிகம் என நினைக்கின்றனர்.
எனவே நானும் ரசாயன முறை சாகுபடிக்கு மாறிவிட்டேன். நேரடியாக சென்று விற்பதாலும், குடும்ப உறுப்பினர்களே காய்கறிகளை அறுவடை செய்வதால் கூலி மிச்சமாகிறது, என்றார்.