ADDED : செப் 14, 2026 01:23 AM
'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் நடிக்கிறாரா விஜய்
அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் 'கிளாடியேட்டர்ஸ்'. ஏ.எல்.விஜய் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அஜித் பங்கேற்ற கார் ரேஸ் போட்டியை லண்டனில் முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டி முடிந்த பின், ரேஸர் உடையில் அஜித் - விஜய் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், 'இரு பெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி' என்றும் ஹேஸ்டேக்கில் கிளாடியேட்டர்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவர் படத்திற்கும் தான் இசையமைத்ததை சொல்கிறாரா, கிளாடியேட்டர்ஸ் படத்தில் இருவரும் நடிப்பதை குறிப்பிடுகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
குடி பழக்கம்: தினந்தோறும் நாகராஜ் அட்வைஸ்
நடிகரும் இயக்குனருமான தினந்தோறும் நாகராஜ் 'ஆகாயம்' எனும் படத்தை இயக்கி உள்ளார். சென்னையில் நடந்த பட விழாவில் நாகராஜ் பேசுகையில், ''இப்படத்தில் குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும் என்ற வசனம் இருக்கும். குடியை கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. என்னை போல வாழ்க்கையில் தவறான பாதைக்கு சென்று திரும்பிவர நினைப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். என்னால் மீண்டு வர முடிந்தது என்றால், எல்லோராலும் முடியும் என நம்புகிறேன்'' என்றார்.
ஆக் ஷன் படத்தில் துருவ் விக்ரம்
தெலுங்கில் 'ராட்சசன், கில்லாடி' படத்தை இயக்கிய ரமேஷ் வர்மா அடுத்து துருவ் விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். துருவின் 4வது படமான இது, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஆக் ஷன் கதையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்குகிறது. துருவ் பிறந்தநாளான செப்.,23ல் படத்தின் டைட்டில், நாயகி, மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது.
நோய் கற்றுத்தந்த பாடம்: சமந்தா
மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டது குறித்து பேசிய நடிகை சமந்தா, ''அந்த சமயத்தில் என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற குணங்களை இந்த நோய் கற்றுக்கொடுத்தது. அது எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன'' என்றார்.
என் தம்பி என்னிடமே நடிப்பான்: இளையராஜா
பாலச்சந்திரன் இயக்கத்தில் சிவாஜி பேரன் தர்ஷன் நாயகனாக நடிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தில் கங்கை அமரன், ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். செப்.,25ல் ரிலீஸ் ஆகிறது. இப்பட விழாவில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, ''சிவாஜி நேர்மை தவறாதவர். அவரை போல தர்ஷன் வர வாழ்த்துகள். என் தம்பி நிஜ வாழ்க்கையில் நல்லா நடிப்பான், என்னிடமே நடிப்பான்'' என கலாய்த்தார்.
7 ஆண்டுக்கு பின் ரிலீசாகும் விமலின் 'சண்டக்காரி'
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் 2012ல் இயக்கிய 'மை பாஸ்' படத்தை தமிழில் 'சண்டக்காரி' தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதே கதையில் சில மாற்றம் செய்து ஆர்.மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதிய இப்படத்தில் விமல் நாயகனாகவும், ஸ்ரேயா நாயகியாகவும் நடித்துள்ளனர். 2019ல் தயாரான இப்படம், 7 ஆண்டுக்கு பின் தற்போது செப்.,18ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
