UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:16 PM
குடும்பம் தான் ‛பர்ஸ்ட்’ - சிவகார்த்திகேயன்
சென்னை, பரணிபுதுாரில் 2000க்கும் அதிகமான ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். மினி அரசியல் மாநாடு மாதிரி நடந்த இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, ‛‛மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆங்கர் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்றார்கள். நான் நடிகராக ஜெயித்துள்ளேன். விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் அன்பினால் ஒன்றாக இருக்கிறோம். தினமும் 15 நிமிடங்களாவது புத்தகம் வாசிங்க. அது நம்மை மேம்படுத்தும். நன்றாகப் படியுங்கள், சம்பாதியுங்கள். குடும்பம்தான் முதலில் முக்கியம்’’ என்றார்.
அக்., 9ல் 6 படங்கள் ரிலீஸ்
அடுத்தவாரம் ரஜினியின் ‛ஜெயிலர் 2’ ரிலீஸாவதால் இந்தவாரம் தமிழ் சினிமாவில் பிரபலமான அல்லது முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக அக்., 9ல் “ஆல் பாஸ், இ 1, கிட்டி, பருந்து, நோவா, தாய் நிலம்” ஆகிய 6 சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ரூ.100 கோடி, உலகளவில் ரூ.150 கோடி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் நடிப்பில் செப்., 10ல் வெளியான படம் மண்டாடி. 25 நாட்களை கடந்துள்ள இப்படம் வசூலிலும் சாதித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடியும், உலகளவில் 150 கோடி வசூலையும் இப்படம் எட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. சூரிக்கு முதல் ரூ.100 கோடி படமாக அவரது திரைப் பயணத்தில் மறக்க முடியாத வெற்றியை தந்துள்ளது.
லோ பட்ஜெட் படம் : அட்லி ஆசை
விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் அட்லி. அவர் அளித்த பேட்டியில், ‘‘என் முதல் படம் ராஜா ராணி லோ பட்ஜெட்டில் தான் செய்தேன். ஹை பட்ஜெட், லோ பட்ஜெட் என்பது வியாபாரத்திற்கு தான். லோ பட்ஜெட் எடுக்க ஆசை; கதை அமைந்தால் செய்வேன். அஜித்தை வைத்து படம் பண்ணலாம். ஒரு படம் எடுத்து முடிக்கும் வரை வேறு படத்திற்கு கவனம் செலுத்த மாட்டேன். ‘ராக்கா’ முடிந்த பிறகே அடுத்த படம் பற்றி யோசிப்பேன்’’ என்றார்.
பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம் - ஜான்வி காட்டம்
நடிகை ஜான்வி கபூர் நடித்த ‛தேவரா’ படத்திலிருந்து ‛சுட்டாமல்லே’ என்ற அவரது பாடலை ஏஐ மூலம் சிலர் ஆபாசமாக சித்தரித்து பரப்பி விட்டுள்ளனர். ஜான்வி வெளியிட்ட கண்டன பதிவு: தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி ஒரு பெண்ணின் கண்ணியத்தை சிதைப்பது பாலியல் வன்முறைக்கு இணையான குற்றம். பெண்கள் சந்திக்கும் உடல்ரீதியான பயத்தையே நாம் இன்னும் முழுமையாக கையாளாத நிலையில், அந்த அச்சுறுத்தல் இப்போது டிஜிட்டல் உலகிற்கும் பரவியுள்ளது. இதற்கான தீர்வு என்பது உங்கள் மகளை பாதுகாப்பது என்பதாக மட்டும் இருக்க முடியாது. மற்றவரின் தனிப்பட்ட எல்லைகளை மீறுவதற்கு தங்களுக்கு உரிமை இருப்பதாக நினைக்கும் மனநிலை மாற வேண்டும். இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குரல் கொடுத்த ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா, குஷ்பு ஆகியோருக்கு என் நன்றிகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ஆன ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்
தமிழ் சினிமாவின் பிரபலமான ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். இவர் முதன்முறையாக படம் இயக்குகிறார். ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைபிரட் முறையில் இந்த படம் உருவாகிறது. படத்தில் நடிப்பவர்கள் உள்ளிட்ட மற்ற விபரம் விரைவில் வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் வலது கரமாக இருந்து அவரின் பல படங்களை தயாரித்த ஆர்டி ராஜா கடன் பிரச்னையால் சில ஆண்டுகள் படம் தயாரிக்காமல் இருந்தார். இந்த படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்புக்கு திரும்புகிறார்.
ராஷ்மிகா மனைவியாக அமைந்தது பாக்கியம் - விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்த ரணபாலி படம் அக்., 16ல் ரிலீஸாகிறது. மனைவியாக ராஷ்மிகா அமைந்தது பற்றி விஜய் தேவரகொண்டா கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருக்கிறது. நல்லதொரு குடும்பம் அமைந்ததும், ராஷ்மிகா போன்ற ஒரு மனைவி கிடைத்ததும் நான் செய்த பாக்கியம் என்றார்.
