/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெள்ளமலை காட்டில் புள்ளி மான்கள் கூட்டம்: வெள்ளிமலையைப் போல பாதுகாக்க வேண்டும்
/
வெள்ளமலை காட்டில் புள்ளி மான்கள் கூட்டம்: வெள்ளிமலையைப் போல பாதுகாக்க வேண்டும்
வெள்ளமலை காட்டில் புள்ளி மான்கள் கூட்டம்: வெள்ளிமலையைப் போல பாதுகாக்க வேண்டும்
வெள்ளமலை காட்டில் புள்ளி மான்கள் கூட்டம்: வெள்ளிமலையைப் போல பாதுகாக்க வேண்டும்
ADDED : மே 07, 2025 01:55 AM

மதுரை: மேலுார் வெள்ளலுார் அருகே அம்பலக்காரன்பட்டி, குறிச்சிப்பட்டி பகுதி வெள்ளமலைக் காட்டில் புள்ளிமான்கள் கூட்டம், கூட்டமாக ரோட்டை கடந்து செல்லும் காட்சி மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் ஆவண வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடையபட்டி வெள்ளிமலை கோயில் காட்டில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது வெள்ளமலைக் கோயில் காடு. இக்காடு புள்ளிமான், கடாமான், குல்லாய் குரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, காட்டுப்பூனை, புனுகுப்பூனை, மரநாய், காட்டுப்பன்றி, குழிமுயல், மலைப்பாம்பு, உடும்புகளின் வாழிடமாக உள்ளது.
வல்லுாறு, கரும்பருந்து, செம்மார்பு குக்குறுவான், பொன்முதுகு மரங்கொத்தி, செந்தார் பைங்கிளி, கதிர்குருவி, கொண்டாலத்தி, வெண்புருவ சின்னான் உள்ளிட்ட 52 வகையான பறவையினங்கள், எலுமிச்சை அழகி, வெள்ளிவரையன், புள்ளி நீலன், எலுமிச்சை நீலன், மஞ்சளாத்தி, பசலை சிறகன், வெண்மதி உள்ளிட்ட 40 வகை வண்ணத்துப்பூச்சியினங்கள், தேன் தட்டான், நெட்டைக்கால் தட்டான், பச்சைச் சதுப்பன், குங்குமத்தட்டான், தேசாந்திரி தட்டான் என 8 வகையான தட்டான் இனங்கள் வெள்ளமலை கோயில்காட்டில் வாழ்வதை ஏற்கனவே ஆவணப்படுத்தியுள்ளோம்.
உசிலை, விடத்தலை, வெள்வேலம், வெப்பாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மரங்களும், ஆவாரம், முசுண்டை, காட்டுத் துளசி, மூக்கிரட்டை உள்ளிட்ட 50 வகையான செடிகள் வளர்கின்றன என்கிறார் அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்த்தாசன்.
அவர் கூறியதாவது: வெள்ளமலையின் தெற்குச்சரிவு சிவகங்கை வனத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. வடக்கு சரிவு மதுரை மாவட்ட வருவாய்த்துறையின் கீழ் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பசுமை பரப்பு அம்பலக்காரன்பட்டி, குறிச்சிப்பட்டி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டாலும் அரசின் கோப்புகளில் புறம்போக்கு என்று உள்ளதால் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு வெள்ளமலையில் நிலம் ஒதுக்கப்படுகிறது.
வெள்ளமலை கோயில்காட்டை பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்க கோரி 2024 அக்.21 ல் மக்கள் சேவை மன்றம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தோம். மதுரை மாவட்டத்தில் பல்லுயிரிய மரபு தளம் பரிந்துரை பட்டியலில் இடையபட்டி வெள்ளிமலை கோயில் காடு இணைக்கப்பட்டிருப்பது போல வெள்ளலுார் வெள்ளமலை கோயில் காட்டையும் சேர்க்க வேண்டும் என வனத்துறையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.

