/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமையலறை வந்தாச்சு காஸ் அடுப்பு என்னாச்சு
/
சமையலறை வந்தாச்சு காஸ் அடுப்பு என்னாச்சு
ADDED : டிச 02, 2024 04:37 AM

கொட்டாம்பட்டி : சமையலறை கட்டி, காஸ் அடுப்பு, சிலிண்டர் இல்லாததால் திறந்த வெளியில் சமைக்கின்றனர். இதனால் புளியமங்கலம் மாணவர்களுக்கு சுகாதாரமான சத்துணவு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
சூரப்பட்டி ஊராட்சி புளியமங்கலத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உயர்நிலை பள்ளியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்தாண்டு ரூ.7.43 லட்சத்தில் சமையலறை கூடம் கட்டப்பட்டது. இப் பள்ளியில் சூரப்பட்டி, புளியமங்கலம், புதுார், பொட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் திறந்த வெளியில் சமைப்பது ஏற்கனவே தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சமையலறை கட்டப்பட்டது. அது தற்போது பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தப்படுகிறது.
பெற்றோர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது : திறந்தவெளியில் சமைக்கும் இடத்தை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. சமையலறையை பயன்படுத்தாதது குறித்து கேட்டால் காஸ் அடுப்பு, சிலிண்டர் இல்லை என்கின்றனர். சமையலறை கட்டி ஓராண்டுக்கும் மேலாகிறது. அதனை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
பி.டி.ஒ., ராமமூர்த்தி கூறுகையில், காஸ் அடுப்பு, சிலிண்டர் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.