/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சி பேசி வருகிறது
/
புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சி பேசி வருகிறது
புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சி பேசி வருகிறது
புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சி பேசி வருகிறது
ADDED : டிச 27, 2025 07:25 AM

மதுரை: ''புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்,'' என, மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக(அ. ம. மு. க.,) பொதுச் செயலாளர் தினகரன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது : அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என்னையும், கட்சியையும் தொடர்புப்படுத்தி அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள். நான் தூண்டிவிட்டு தான் த.வெ.க., வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர்ந்ததாக சொல்கிறார்கள். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எந்த முடிவெடுத்தாலும் நான் தான் தூண்டிவிடுவதாக கூறுகிறார்கள்.
அவர் முடிவெடுத்து விட்டார். தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என விவாத மேடைகளில் பேசுகிறார்கள்.
அ.ம.மு.க., என்ன செய்ய வேண்டும் என நாங்கள் தான் முடிவு செய்வோம். எங்களுடைய தகுதியான வேட்பாளர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கிற கூட்டணிக்கு தான் நாங்கள் செல்வோம். நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியில் செல்லவிருக்கிறோம் என்றால் எத்தனை தொகுதிகள் என்று பேசிய பிறகு தான் கூட்டணிக்கு செல்ல முடியும்.
தமிழகத்தில் தற்போது கூட்டணி தலைமை வகிக்கும் கட்சிகளும், புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சிகளும் நாங்கள் தங்களது கூட்டணியில் வர வேண்டும் என பேசுவது உண்மை. ஆனால் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அலைபேசியிலும், நேரிலும் கூட்டணியில் வர வேண்டும் என்று எங்களை வலியுறுத்துகிறார்.
டில்லிக்கு சென்று விட்டு வந்தாலோ, தலைவர்களை சந்தித்தாலோ, அழுத்தம் கொடுத்ததாக பேசி ஊடகத்தின் விருப்பத்தை எங்களிடம் திணிக்கிறார்கள்.
நாங்கள் எந்த முடிவாக இருந்தாலும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்வோம். ஊடகங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இருந்தாலும் உங்கள் ஆசைக்கு நாங்கள் முடிவெடுக்க மாட்டோம்.
நான் பெங்களூருவில் இருந்து டில்லி சென்று பா.ஜ., தலைவர்களை சந்தித்ததாக பரப்பப்படும் செய்திகள் உண்மையல்ல. பழைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட்டணிக்காக என்னிடம் பேசுவது உண்மை. ஆனால் நான் யாரையும் சந்திக்கவில்லை. எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. கூட்டணிக்காக யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை. இவ்வாறு கூறினார்.
விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என த.வெ.க., கூறி வரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகள் பேசி வருவது குறிப் பிடத்தக்கது.

