/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாய் கட்டியும் பிரச்னை தீரலயே
/
கால்வாய் கட்டியும் பிரச்னை தீரலயே
ADDED : பிப் 09, 2026 05:45 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் திட்டமிடலின்றி கட்டிய கால்வாயில் கழிவுநீர் செல்லாததால் அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.
அப்பகுதி முரளி கூறியதாவது: இங்கு பால் பண்ணை, கருப்பு கோயில் தெருக்களில் ஏராளமானோர் வசிக்கிறோம். 2021--22ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 4.11 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. தெருக்கள் பள்ளமான நிலையில் கால்வாய்கள் உயர்த்தி கட்டப்பட்டன.
கருப்புகோயில் அருகே கால்வாய் அடைபட்டதாலும் கழிவுநீர்செல்ல வழியில்லை. இதையடுத்து மதுரை மெயின் ரோட்டில் கருப்பு கோயில் அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாயுடன் சிறிய பாலம் அமைக்கப்பட்டது. முதலில் கட்டிய கால்வாய் 2வது கால்வாயுடன் இணைக்கப்பட்டது.
சரியான வாட்டமின்றி இணைக்கப்பட்டதால் கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம்வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
மழைக்காலங்களில் தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்குகிறது.
தேங்கியிருக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கால்வாய்கள் அமைத்தும் பயனற்று அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

