ADDED : மே 13, 2026 03:32 AM

சோழவந்தான்: தேனுார் சேம்பர் ஜே.ஜே நகரில் அடிப்படை வசதிகளின்றி அப்பகுதியினர் தவியாய் தவிக்கின்றனர்.
இங்கு நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் செய்து தரப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சில பகுதிகளில் மட்டுமே 'சிமென்ட்' ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அப்போது கட்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.குப்பைத் தொட்டிகள் அமைக்காததாலும், துாய்மை பணியாளர்கள் வராததாலும் குடியிருப்புகளுக்கு அருகே குப்பை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் சிரமம் அடைகின்றனர்.
அப்பகுதி விஜயகுமார் கூறியதாவது: பல பகுதிகளில் மண் ரோடாகவே உள்ளது. மழைக்காலங்களில் சகதியாக மாறுவதால் நடக்க வழியில்லை. நடந்து செல்வோர் பலரும் தடுமாறி விழுகின்றனர். வாகனங்கள் அடிக்கடி புதைந்து சிரமப்படுகின்றன. சாக்கடை கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் கழிவுகள் தேங்குகிறது.
குடியிருப்புகளுக்கு அருகே திறந்த வெளிகளில் குப்பை கொட்டப்படுகிறது. இது முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
