ADDED : டிச 15, 2025 05:45 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நெடுங்குளம் கண்மாயில் கழிவுகள் கொட்டப்பட்டும், கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டும் வருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதி பிச்சைமணி கூறியதாவது: இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். வைகை பெரியாறு பாசனத்தின் ஒரு பகுதியாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 25 ஏக்கர் பரப்புள்ள கண்மாய் அமைந்துள்ளது. 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும் ஆதாரமாக உள்ளது. வைகையில் தண்ணீர் திறப்பால் கண்மாய் முழுவதும் நீர் நிறைந்துள்ளது.
கண்மாயில் குப்பை கொட்டப்பட்டு மாசடையும் நிலை உள்ளது. அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரில் மிதக்கின்றன. மேலும் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கால்நடை கழிவுகள் நிறைந்து மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நீரின் நிறம் கருப்பாகி சாக்கடையாக மாறும் நிலை ஏற்படும். எனவே பொதுப்பணித்துறை, ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
