ADDED : ஏப் 26, 2026 11:37 PM
மதுரை: கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை, புரட்சிப் பாவலர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
பேரவை தலைமை பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன் வரவேற்றார். பொருளாளர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவி தலைமையில் 'தலைநிமிர வைக்கும் நம் தமிழ்' எனும் கவியரங்கம் நடந்தது.
கவிஞர்கள் மகா முருகு பாரதி, லிங்கம்மாள், குறளடியான், பழனி, முனியாண்டி உட்பட பலர் கவிதை பாடினர். சிறப்பாக கவிதை பாடியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் விருது வழங்கினார்.
வீரபாண்டியத் தென்னவன் எழுதிய 'தமிழன்னையே போற்றி', கண்ணன் எழுதிய 'அருள்மிகு மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் திருத்தமிழ்த் திருப்பாமாலை', கவிஞர் அரங்க கிரிதரன் எழுதிய 'மரபுத் தமிழ்மாலை', கவிஞர் பால் பேரின்பநாதன் எழுதிய 'தமிழும் தமிழரும்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
பேரவை துணைச் செயலர் கங்காதரன் நன்றி கூறினார். வீரபாண்டியத் தென்னவன் மனைவி வீர செந்தாமரை, பள்ளி தலைமையாசிரியர் அமுது ரஜினி, யாதவர் கல்லுாரி பேராசிரியர் பரமானந்தம், கவிஞர்கள் பொற்கைப் பாண்டியன், மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
