/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் கனவாகிப்போன சுரங்கப்பாதை
/
திருப்பரங்குன்றத்தில் கனவாகிப்போன சுரங்கப்பாதை
ADDED : ஆக 08, 2025 02:49 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைப்பது சம்பந்தமாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள், மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரோட்டில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது. பாலாஜி நகர், பாலசுப்பிரமணிய நகர், ஹார்விபட்டி, சந்திராபாளையம் பகுதியினர் திருப்பரங்குன்றம் சென்று திரும்பவும், அருகேயுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரும் இந்தப் பாதையை பயன்படுத்தினர்.
சில ஆண்டுகளுக்கு முன் 2 வது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு அதிக ரயில்கள் செல்கின்றன. இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அப்பகுதி முழுவதும் நிரந்தர இரும்புத் தடுப்புகளை அமைத்தனர்.
இதனால் பொது மக்களும், மாணவியரும், மேம்பாலம் வழியே சென்றனர். மேம்பாலத்தின் ஆரம்ப, முடிவு பகுதிகள் வெகு தொலைவில் உள்ளன. பெரும்பாலும் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள வழியில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். அதிக விபத்து அபாயம் உள்ளதால் அங்கு சுரங்கப்பாதை வேண்டும் என சர்வ கட்சியினர், வணிகர்கள் ஓராண்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தை திருமங்கலம் ஆர்.டி.ஓ., நேரில் ஆய்வு செய்தார்.
அவரிடம் சுரங்கப்பாதை அமைக்க போராட்ட குழுவினர், வணிகர்கள் வலியுறுத்தினர். ரயில்வே பொறியாளர்களிடமும் ஆர்.டி.ஒ., ஆலோசனை நடத்தினார். பின்பு அவர், சுரங்க பாதையை உடனே அமைக்க முடியாது. அதுவரை அடைக்கப்பட்ட ஒரு பகுதியை திறந்து விடுமாறும், ரயில்கள் வரும் பொழுது அதிக அளவில் சத்தம் எழுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் பணியாளரிடம் ஆர்.டி.ஓ., கூறினார். இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி., ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோரும் மத்திய ரயில்வே அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதினர். நேற்று வரை அங்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.