/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை ஆறும் ஒரு திருவிளையாடல் புராணம்தான்
/
வைகை ஆறும் ஒரு திருவிளையாடல் புராணம்தான்
ADDED : டிச 28, 2024 05:23 AM
திருப்பரங்குன்றம் :  மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு ஐந்திணை தமிழ் மன்றம் சார்பில் திருவிளையாடல் புராணம் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். தமிழ் துறைத் தலைவர் பரிமளா வரவேற்றார். தமிழ் சங்கத்தில் திருவிளையாடல் என்ற தலைப்பில் மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது: பசுமலை, யானைமலை திருவிளையாடல் புராணங்கள் நடந்த இடங்கள். கீழடி மணலுார்தான் முதல் திருவிளையாடல் புராணம் நடந்த இடம். ஆதி மதுரை கீழடி தான். முதல் திருவிளையாடல் மணலுாரில் இருந்து தான் துவங்குகிறது.
தற்போதுள்ள மதுரை வந்தபின்பு இறைவனின் 64 திருவிளையாடல்கள் மதுரையைச் சுற்றி நடந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னதி பிரகாரத்தை வலம்வரும் போது வடமேற்கு மூலையில் ஆதிபராசக்தி அருகே சங்க புலவர் சன்னதி உள்ளது. 48 புலவர்களின் விக்கிரகங்கள் அங்கு உள்ளன. சங்கத்தமிழ் புலவர்களின் குறிப்பும் அங்கு உள்ளது. நடு நாயகமாக இறைவன் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் வைத்து வளர்த்த தமிழ் என்பதற்கான ஆதாரம் அங்கு உள்ளது. வைகை ஆறு ஒரு திருவிளையாடல் புராணம். அதை புனிதமாக கருத வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் எங்கள் குழுவினர் வைகை அணை சென்று பூ அர்ச்சனை செய்வோம் என்றார்.
மாணவர் சுந்தரபாண்டியன் தொகுத்துரைத்தார். மாணவி சத்யபிரியா நன்றி கூறினார்.

