/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரிகள் உண்டு; வசதிகள் இல்லையே: விசும்பும் விஷால் நகர் மக்கள்
/
வரிகள் உண்டு; வசதிகள் இல்லையே: விசும்பும் விஷால் நகர் மக்கள்
வரிகள் உண்டு; வசதிகள் இல்லையே: விசும்பும் விஷால் நகர் மக்கள்
வரிகள் உண்டு; வசதிகள் இல்லையே: விசும்பும் விஷால் நகர் மக்கள்
ADDED : நவ 27, 2025 05:37 AM

மேலுார்: மேலுார் விஷால் நகரில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இந்நகராட்சி 1 வது வார்டு விஷால் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2011 முதல் நகராட்சிக்கு வரிகட்டி வசிக்கும் மக்களுக்கு இதுவரை கழிவு நீர் கால்வாய், தெரு, வீட்டுக் குழாய் இணைப்புகள் கிடையாது. கால்வாய் இல்லாததால் வீட்டில் உறை கிணற்றில் இருந்து கழிவு நீர் நிரம்பி நகராட்சி அமைத்த தார் ரோட்டில் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. இதனால் ரோடு சிதிலமடைந்துள்ளது. கால்வாய் வசதி இல்லாததால் சிலர் பெரியாறு பாசன கால்வாயில் கழிவு நீர் குழாயை இணைத் துள்ளனர்.
அப்பகுதி ஹேமலதா கூறியதாவது: ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் சேகரிக்க வைத்துள்ள உறை கிணறுகள் நிரம்பி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. அதைக்கடந்து செல்வதால் சுகாதார சீர்கேடு, கொசு அதிகரித்து தொற்றுநோய் பரவுகிறது. உறை கிணற்று கழிவு நீர் போர்வெல்லுக்குள் கசிவதால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். கழிவுநீர் செல்ல அமைத்த குழாய் வழியாக விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் செல்வதால் அச்சத்துடன் வசிக்கிறோம். வரி வாங்குவதில் கவனம் செலுத்தும் நகராட்சி, அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், கழிவுநீர் கால்வாய் அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி உள்ளோம். விரைவில் கால்வாய் அமைக்கப்படும். கிணற்றில் போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம். அதுவரை மினி பவர் பம்ப் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றார்.

