ADDED : மார் 11, 2026 05:06 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் பாதையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். இங்கு வடக்குத் தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் ஆரம்பசுகாதார நிலையம் செல்லும் வழியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே இருந்த ஆலமரம், பட்டுப்போனதால் அகற்றப்பட்டது. அகற்றிய அந்த இடம் பள்ளமாகிவிட்டது.
பலமாதங்கள் ஆகியும் அதனை சீரமைக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம், கோயிலுக்கு தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அருகில் வந்ததும் பதறிப்போய் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். இரவில் நடந்து செல்வோரும் தடுமாறி விழுகின்றனர். அருகே கழிவுநீர் கால்வாய் செல்வதால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

