/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறப்பு திருத்தப் பணியில் வாக்காளர்களுக்கு படிவங்களை 'கொத்தா கொடுக்கிறாங்க'! வீடுவீடாக வழங்கி, சந்தேகத்தை தெளிவுபடுத்த எதிர்பார்ப்பு
/
சிறப்பு திருத்தப் பணியில் வாக்காளர்களுக்கு படிவங்களை 'கொத்தா கொடுக்கிறாங்க'! வீடுவீடாக வழங்கி, சந்தேகத்தை தெளிவுபடுத்த எதிர்பார்ப்பு
சிறப்பு திருத்தப் பணியில் வாக்காளர்களுக்கு படிவங்களை 'கொத்தா கொடுக்கிறாங்க'! வீடுவீடாக வழங்கி, சந்தேகத்தை தெளிவுபடுத்த எதிர்பார்ப்பு
சிறப்பு திருத்தப் பணியில் வாக்காளர்களுக்கு படிவங்களை 'கொத்தா கொடுக்கிறாங்க'! வீடுவீடாக வழங்கி, சந்தேகத்தை தெளிவுபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 10, 2025 01:20 AM

மதுரை: படிவத்தை பூர்த்தி செய்ய சிரமப்படுவதாகக் கூறும் வாக்காளர்கள், சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வீடுகளில் படிவங்களை வழங்காமல், ஊழியர்கள் ஒரே இடத்தில் இருந்தவாறு மொத்தமாக வழங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் 2026 ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் நவ.4 ல் துவக்கியது. இதில் வீடுவீடாக சென்று படிவங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை சரிபார்க்கும் பணியில் 3050 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்), 10 பி.எல்.ஓ.,க்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என வருவாய், ஊரக வளர்ச்சி, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் பலர் இதில் ஈடுபட்டுள்ளனர். இதில் வீடுவீடாக சென்று ஊழியர்கள் படிவங்களை வழங்கி வருகின்றனர். தற்போது வரை 30 சதவீதம் வீடுகளில் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளவன.
பொதுமக்கள் புகார் இப்பணியில் உள்ளோர் பலர் வீடுவீடாக படிவங்களை வழங்காமல், கோச்சடை, அச்சம்பத்து, பெத்தானியாபுரம், சோலையழகுபுரம் உட்பட பல பகுதிகளில் பி.எல்.ஏ.,க்கள் எனப்படும் கட்சியினரின் ஏஜன்டுகளிடம் மொத்தமாக வழங்குவதாக புகார் எழுகிறது. இதேபோல அவனியாபுரம், அருஞ்சுனை நகர் உட்பட சில பகுதிகளில் படிவங்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் இந்த இடத்தில், இத்தனை மணி வரை இருப்போம், படிவங்களை வந்து வாங்கிச் செல்லுங்கள் என்றே தெரிவித்துள்ளனர்.
வீடுவீடாக சென்று படிவங்களை வழங்கவும், அதை பூர்த்தி செய்தபின் படிவங்களை மீண்டும் பெறவும், பூட்டிய வீடுகள் இருந்தால் மீண்டும் அங்கு சென்று படிவங்களை வினியோகிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அவ்வாறு வினியோகம் நடக்கவில்லை. இதுபோன்ற புகார் எழுந்ததால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அதைக் கண்டித்துள்ளதுடன், வீடுவீடாக சென்று முறைப்படி வழங்க வேண்டும் என கறாராக உத்தரவிட்டுள்ளனர்.
படிவங்களை பூர்த்தி செய்தபின், 1.7.1987 க்கு முன் பிறந்தவர்கள் ஓய்வூதிய அடையாள அட்டை, பிறப்புச்சான்று, கடவுச்சீட்டு, வசிப்பிடச் சான்று உட்பட 13 வகை ஆவணங்களில் ஒன்றை வழங்க வேண்டும். 1.7.1987 முதல் 2.12.2004க்குள் பிறந்திருந்தால், பிறந்த நாள், இடத்தை நிரூபிக்கும் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
2.12.2004 க்கு பின் பிறந்திருந்தால் பிறந்ததேதிக்கான சான்று, தந்தை / தாயின் பிறந்ததேதி, இடத்தை நிரூபிக்கும் சான்று வழங்க வேண்டும்.
சிரமப்படும் வாக்காளர்கள்
இவ்வாறு பிறப்பு சான்று கேட்டு இருப்பதால் பலர் படிவங்களை பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி விளக்கம் கேட்கும் வகையில் ஊழியர்கள் இல்லாததால் பூர்த்தி செய்த படிவத்துடன் காத்திருக்கின்றனர். ஓட்டுக்களை சேர்க்க விரும்பும் அரசியல் கட்சியினர்தான் இந்த வாக்காளர்களுக்கு உதவ முன்வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இருக்கும் வாக்காளர்களிடம் படிவங்களை நேரடியாக வழங்குவதுடன், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

