/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேத கருத்துகளை உணர்த்துவதால் திருக்குறளுக்கு 'மறை' என்று பெயர் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி விளக்கம்
/
வேத கருத்துகளை உணர்த்துவதால் திருக்குறளுக்கு 'மறை' என்று பெயர் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி விளக்கம்
வேத கருத்துகளை உணர்த்துவதால் திருக்குறளுக்கு 'மறை' என்று பெயர் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி விளக்கம்
வேத கருத்துகளை உணர்த்துவதால் திருக்குறளுக்கு 'மறை' என்று பெயர் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி விளக்கம்
ADDED : பிப் 21, 2026 07:46 AM

மதுரை: ''வேதங்களில் உள்ள கருத்துகளை உணர்த்துவதால் தான் திருக்குறளுக்கு 'மறை' என்று பெயர்'' என மதுரையில் நடந்த 'தமிழர்களின் தாய்மதம்' எனும் நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி விளக்கமளித்தார்.
மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் நடக்கும் இச்சொற்பொழிவில் 'திருக்குறளின் சமயம் எது' என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது:
இந்தியாவின் இடைக்காலம் மேற்கத்திய நாடுகளை விட மேன்மை பெற்றதற்கு காரணம் இங்கு வாழ்ந்த அருளாளர்கள், மகான்கள். இடைக்காலத்திற்கு முற்பட்ட காலங்களில் தோன்றிய இலக்கியங்கள், குறிப்பாக வேதங்கள் இன்று வரை இந்தியாவில் காப்பாற்றப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் அவற்றை அழித்து விட்டனர்.
'யார் சூத்திரர்கள்' என்ற நுாலில் 'அனைத்து குடிகளும் ஒன்றாக இருக்கும் ரிக் வேத சமூகத்தில் சூத்திரர்கள் என்று எவ்வாறு குறிப்பிடலாம்' என அம்பேத்கர் வியக்கிறார்.
வேதங்களில் குறிப்பிட்ட வர்க்கம் மோசமானது என ஓரிடத்தில் கூட குறிப்புகள் கிடையாது. வேதங்களில் உள்ள சொற்களுக்கு வேதத்தை கொண்டே விளக்க வேண்டும். சூத்திரர்களை காலுடன் ஒப்பிடுவது அவர்களை இழிவுபடுத்த அல்ல.
குறியீடுகளை கொண்டு 'மறை'முகமாக விளக்குவது தான் வேதம். கால் என்பது ஒரு குறியீடு. கால் என்றால் அழைத்து செல்லுதல் எனப் பொருள். சமூகத்தை நல்வழியில் அழைத்துச் செல்பவர்கள் சூத்திரர்கள். 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எந்த நுாலிலும், இலக்கியத்திலும் ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது.
இது பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவோர்வகுத்த கட்டுக்கதை. 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்றகுறள் மூலம் வள்ளுவர் நமக்கு வழிகாட்டுகிறார்.
அந்தணர் நுாற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
என்ற குறளில், அந்தணர் ஓதும் வேதங்கள் நிலைபெற்று விளங்க அடிப்படையாய் இருந்து உலகை காப்பது அரசனின் நேர்மையான ஆட்சியே என்கிறார் வள்ளுவர்.
சங்க இலக்கியங்களில் மறை, வேதம் என்று எவை கூறப்படுகிறதோ அதுவே திருக்குறளிலும் கூறப்படுகிறது. திருக்குறள் எதையும் மறைத்துப் பேசவில்லை. குறியீடுகள் எதுவும் கிடையாது. ஆனால் குறியீடுகளால் தத்துவங்களை மறைத்து பேசும் வேதக் கருத்துகளை திருக்குறளும் உணர்த்துவதால் தான் இது மறை என போற்றப்படுகிறது.
இவ்வாறு பேசினார்.
இன்று மாலை 6:30 மணிக்கு இச்சொற்பொழிவு தொடர்கிறது. ஏற்பாடுகளை ராம சமாஜத்தினர் செய்து வருகின்றனர்.

