/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி தான் ஆட்சியில் பங்கேற்போம்: பிரேமலதா சூசகம்
/
தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி தான் ஆட்சியில் பங்கேற்போம்: பிரேமலதா சூசகம்
தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி தான் ஆட்சியில் பங்கேற்போம்: பிரேமலதா சூசகம்
தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி தான் ஆட்சியில் பங்கேற்போம்: பிரேமலதா சூசகம்
ADDED : நவ 18, 2025 05:56 AM

மதுரை: ''தமிழகத்தில் முதன்முறையாக 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதில் ஆட்சியும் அதிகாரமும் கேட்கும் நிலையில் தே.மு.தி.க., இருக்கும்,''என மதுரையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
மதுரையில் நடந்த தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் பாண்டியராஜ், மணிகண்டன் பங்கேற்றனர்.
நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று முதலில் சொன்னதே நாங்கள் தான். லாக்கப் கொலை, பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை பகலிலேயே நடக்கிறது. கனிமவளக் கொள்ளை, லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஊழல் என்று எல்லா இடத்திலும் உள்ளது. இதெல்லாம் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க., உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக உள்ளன. யாருடன் கூட்டணி என இந்த நிமிடம் வரை உறுதிசெய்யப்படவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறலாம், புதிய கூட்டணி அமையலாம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். பீஹாரில் பா.ஜ. கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அதே நிலை தமிழகத்தில் தொடருமா என்று சொல்ல முடியாது.
அதிகாரத்தில் பங்கு 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படி சூழல் வரும் போது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரம் தருவதற்கும் உடன்படுவர். ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் வரலாம்.
எல்லா கட்சிகளும் எங்களுடைய தோழமை கட்சிகள் தான். மக்கள் மனநிலை, கட்சியினரின் மனநிலையை ஆராய்ந்து கூட்டணியை தேர்வு செய்வோம். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னை சந்திக்க வந்து காத்திருக்கிறார். ஆட்சி அதிகாரப்பகிர்வையும் கொடுப்பதில் தவறில்லை. அதற்கான சூழல் இந்த தேர்தலில் வரும் என்பதை நம்புகிறோம்.
இவ்வாறு கூறினார்.
த.வெ.க., கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்றதற்கு 'அதை அங்கே கேளுங்கள். எங்களிடம் கேட்காதீர்கள்' என்றார்.

