/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய கலாச்சாரம் பெற்றோரை மறக்க செய்கிறது; பொன்னம்பல அடிகளார்
/
இன்றைய கலாச்சாரம் பெற்றோரை மறக்க செய்கிறது; பொன்னம்பல அடிகளார்
இன்றைய கலாச்சாரம் பெற்றோரை மறக்க செய்கிறது; பொன்னம்பல அடிகளார்
இன்றைய கலாச்சாரம் பெற்றோரை மறக்க செய்கிறது; பொன்னம்பல அடிகளார்
ADDED : டிச 08, 2025 03:18 PM

மதுரை: நவீனம் என்ற பெயரில் மோகம் கொண்ட இளைய சமுதாய கலாச்சாரம் தாய் தந்தையர்களை மறக்க செய்கிறது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வேதனையோடு பேசினார்.
உலகத் திருக்குறள் பேரவை மற்றும் சென்னை மோகனரங்கம் ஆய்வு மையம் சார்பில் கவிஞர் மார்ஷல் முருகன் எழுதிய, 'பேனா பேசுகிறது' கவிதை நூல் வெளியீட்டு விழா மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில் நடந்தது. முனைவர் பாட்டழகன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உலகத் திருக்குறள் பேரவை தலைவர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் நூலை வெளியிட்டு சிறப்பித்தார்.
முதல் பிரதியை சென்னை கமலா சினிமாஸ் நிர்வாக இயக்குனர் வி.என்.சி டி..வள்ளியப்பன், இரண்டாவது பிரதியை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பெற்றனர். உலகத் திருக்குறள் பேரவை மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் தொடக்க உரையாற்றினார்.
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பாராட்டுரை வழங்கினார். வானொலி முன்னாள் இயக்குனர் சுந்தர. ஆவுடையப்பன் நூல் அறிமுகம் செய்து பேசினார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், கவிஞர் கா.கருப்பையா வாழ்த்துரை வழங்கினர்.
பொன்னம்பல அடிகளார் வேதனை
நிகழ்வில் பொன்னம்பல அடிகளார் பேசியதாவது; 'எமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்று சொன்ன மாகவிஞன் பாரதி பணியாற்றிய பூமி மதுரை. தமிழ் மையத்தின் அடையாளம் மதுரை. கவிஞர் மார்ஷல் முருகன் எழுதிய கவிதைகள் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கிறது. புத்தகங்கள் பலரை தலைகுனிய வைத்தாலும் வாழ்க்கையில் தலை நிமிர வைக்கிற புனித பணியை ஆற்றுகிறது. உலகை புரட்டிப் போட்ட புத்தகங்கள் ஏராளம். 'காமன்சென்ஸ்' என்ற புத்தகம் அமெரிக்காவை புரட்டிப் போட்டது. மூன்று கோடிக்கு மேல் விற்பனையானது.
ஆபிரகாம் லிங்கனை அதிபராக்கியதும் ஒரு புத்தகம் தான். அதைப் படித்து 40 லட்சம் கறுப்பின மக்களை விடுதலை செய்தார்.
மூலதனம் என்ற புத்தகம் அற்புதமான நூல். 'அறிவியலும் ஆன்மிகமும் கைகோர்க்க வேண்டும்' என்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில், இந்திரா காந்தி 'குன்றக்குடி மாடல்' என்ற திட்டத்தை அறிவித்தார்.
இன்றைய கலாச்சாரம், தாய் தந்தையர்களை மறக்கச் செய்கிறது. முதியோர் இல்லங்கள் இன்று பெருக்கெடுத்து உள்ளது. அது குறைய வேண்டும். அம்மாவும் அப்பாவும் வெறும் வார்த்தைகள் அல்ல, அதுவே உயிர். அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். எவன் தான் வாழ்ந்த காலத்தில் கலாச்சாரத்தை பாதுகாக்கிற பணியில் ஈடுபடுகிறானோ அவன் தான் கவிஞன்'. இவ்வாறு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
நிகழ்ச்சியை உலக திருக்குறள் பேரவை மதுரை மாவட்ட செயலாளர் கவி பாரதி அசோக்ராஜ் தொகுத்து வழங்கினார். கவிஞர் மார்ஷல் முருகன் ஏற்புரை வழங்கினார்.

