/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்
/
மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்
ADDED : டிச 20, 2025 05:20 AM

மதுரை: மதுரை சுப்பிரமணிய புரம் மார்க்கெட்டில் பழைய வியாபாரிகளுக்கே கடைகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாநகராட்சி கமிஷனர் அறை முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மார்க்கெட்டில் ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கே மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீண்டும் இடெண்டர் வெளியிடும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி சாலையோரம் மார்க்கெட் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தியாகு, செல்வம் உள்ளிட்டோர் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் முன் நேற்று காலை 11:00 மணி முதல் பெண் வியாபாரிகள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணைமேயர் நாகராஜன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் கூறுகையில், மொத்தம் 61 கடைகளில், 40 மட்டுமே பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்கி, மீதமுள்ள 21 கடைகள் இடெண்டர் மூலம் வேறு நபர்களுக்கு ஒதுக்க அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக கடை நடத்திய வியாபாரிகள் பாதிக்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் பழைய வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும் என்றனர்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், உரிய வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளை வைத்துள்ளனர். வருவாயை அதிகரிக்க டெண்டர் மூலம் கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் வியாபாரிகள் சமாதானம் ஆகாததால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

