/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்க பாரம்பரிய பூச்சுக் கலவை
/
திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்க பாரம்பரிய பூச்சுக் கலவை
திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்க பாரம்பரிய பூச்சுக் கலவை
திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்க பாரம்பரிய பூச்சுக் கலவை
ADDED : செப் 03, 2024 04:33 AM

மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலின் நாடகசாலை, பள்ளியறையை புனரமைக்க ரூ.8 கோடி ஒதுக்கிய நிலையில் சுவர்கள், கூரையின் மீது பாரம்பரியமான சுண்ணாம்புக் கலவை பூச்சு நடக்கிறது.
பல நுாறு ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் பயன்பாடில்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.
சுண்ணாம்புக் கல்லை தண்ணீரில் ஊறவைத்து, அதனை சலித்து சுண்ணாம்புப் பால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சுண்ணாம்பையும் தண்ணீரையும் தனியாக பிரித்தெடுக்கின்றனர்.ஆற்றுமணலை சலித்து, சுண்ணாம்புடன் சேர்த்து அரவை இயந்திரம் மூலம் நன்கு அரைக்கப்படுகிறது. இது 21 நாட்களுக்கு 'கியூரிங்' செய்யப்படுகிறது. கடுக்காய், கருப்பட்டியை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீருடன் 'கியூரிங்' செய்த கலவை மீண்டும் அரைக்கப்படுகிறது.
கடுக்காய், கருப்பட்டி கலந்த தண்ணீரை பழங்கால செங்கல் கட்டட சுவர்களின் மீது தெளித்து கலவையின் முதல் பூச்சு பூசப்படுகிறது. அதன் பின் 3 மாதங்கள் கழித்து 2வது பூச்சு பூசப்பட்டு கடைசியாக சுண்ணாம்புப்பால் கலவையால் சுவர்கள் 'பளபள'ப்பாக்கப்படுகின்றன. இந்த முறையில் பூசப்படும் கலவை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
நாடகசாலை, பள்ளி, மியூசியம், மாடத்தின் கூரை வரை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இறுதியாக தட்டோடு பதிக்கப்படும். சுண்ணாம்புக்கல்லில் இருந்து பாலை பிரிப்பது முதல் மணலை அரைப்பது வரை நிறைய வேலை இருப்பதால் பணிகள் முடிவடைய இன்னும் 9 மாதங்களாகும்.