/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திரை திருவிழாவில் விபரீதம்; நெரிசல், நீரில் மூழ்கி 3 பேர் பலி
/
சித்திரை திருவிழாவில் விபரீதம்; நெரிசல், நீரில் மூழ்கி 3 பேர் பலி
சித்திரை திருவிழாவில் விபரீதம்; நெரிசல், நீரில் மூழ்கி 3 பேர் பலி
சித்திரை திருவிழாவில் விபரீதம்; நெரிசல், நீரில் மூழ்கி 3 பேர் பலி
ADDED : மே 12, 2025 11:54 PM

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று அதிகாலை, 5:55 மணிக்கு பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்திற்கு இடையே பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரையில் வைகையாற்றில் இறங்கி அருள்பாலித்தார் அழகர்.
காலை, 10:40 மணிக்கு அழகரை குளிர்விக்க மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். சிலர் தடை செய்யப்பட்ட விசை பம்புகளை பயன்படுத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பக்தர்கள் ஆங்காங்கே தடுக்கப்பட்டதால், போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பக்தர்கள், சுவாமி அருகே சென்று தரிசித்தனர். அங்கபிரதட்சணம் செய்தனர். பல லட்சம் பக்தர்கள் விழாவை காண குவிந்ததால், மதுரை நகர் முழுதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தனர்.
விழாவில் பங்கேற்க திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின் பொறியாளர் பூமிநாதன், 63, குடும்பத்துடன் வந்தார். அப்போது, திடீரென மயங்கினார். போலீசார் அமைத்த தடுப்புகளால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
மதுரை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மீனாட்சி கல்லுாரி அருகே யானைக்கல் பாலத்தின், மூன்றாவது துாண் பகுதியில் கண்ணன், 43, என்பவர் இறந்த நிலையில் கிடந்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த சங்கர்குமார் மகன் ஜெயவசீகரன், 16, வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை குடும்பத்துடன் தரிசித்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு ஜெயவசீகரன், நண்பர் அய்யனாருடன் ஆற்றில் குளித்தபோது, மூழ்கி இறந்தார். அய்யனார் சிகிச்சையில் உள்ளார்.
இறந்த பக்தர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளார்.