/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கூடல்நகர் ஸ்டேஷனில் ரயில் விபத்து ஒத்திகை
/
மதுரை கூடல்நகர் ஸ்டேஷனில் ரயில் விபத்து ஒத்திகை
ADDED : பிப் 07, 2025 11:54 PM

மதுரை: மதுரை கூடல்நகர் ஸ்டேஷனில் நேற்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் ரயில் விபத்து ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
ரயில் விபத்துகளின் போது மீட்புக் குழுவினர் துரிதமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக, தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
இதற்காக கூடல்நகர் ஸ்டேஷனில் நேற்று காலை 10:44 மணிக்கு மதுரை - தாம்பரம் சிறப்பு ரயில் விபத்துக்குள்ளானது போல் ஏற்பாடு செய்தனர்.
இன்ஜின் அருகில் உள்ள ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டி கவிழ்க்கப்பட்டு அதன்மீது ஒரு பொதுப் பெட்டி நிற்கும்படியும் தீப்பற்றி எரிவது போலவும் அமைக்கப்பட்டது. தண்டவாளங்கள் சிதைந்தும், மின்சார கம்பிகள் அறுந்தும் கிடந்தன.
இதை விபத்தாகக் கருதி லோக்கோ பைலட் தாமரைச் செல்வன், உதவி லோக்கோ பைலட் ஆண்டனி லெனின் ஆகியோர் காலை 10:47 மணிக்கு மதுரை கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து அபாய சங்கு ஒலித்தது ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
மீட்பு பணி
உதவி பாதுகாப்பு கமிஷனர் சிவதாஸ் தலைமையிலான ஆர்.பி.எப்., போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் சிவில் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காலை 11:20 மணிக்கு மீட்பு தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்து பொருட்கள், டாக்டர்கள், கிரேனுடன் கூடிய பொருட்களுடன் 'விபத்து மீட்பு ரயில்' மதுரை ஸ்டேஷனில் இருந்து கூடல்நகர் விபத்துப் பகுதிக்கு வந்தது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் சென்றனர்.
மதுரைக் கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்ட அனைத்து குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
ஒத்திகையில் கலெக்டர் சங்கீதா சம்பவ இடத்தை பார்வையிட்டு, விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
பராமரிப்பை மேம்படுத்தியுள்ளோம்
கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கூறியதாவது: விபத்து நிகழும்போது எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற 'மாதிரி விபத்து' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து, எவ்வாறு துரிதமாக செயல்படுகிறோம் என்பதைப் பார்க்க முயற்சித்தோம். இந்தாண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு உதவியுடன் ஒரு பெட்டி மீது மற்றொரு பெட்டி கிடப்பது போன்று பெரிய அளவில் செய்தோம்.
இந்த மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள், சாரணர், ரெட்கிராஸ் இயக்கங்கள், சிவில் பாதுகாப்பு படையினர் என 30 க்கும் மேற்பட்ட ஏஜன்சிகள் ஈடுபட்டன. 250 ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.
விபத்தில் 7 பேர் உயிரிழந்து, 10 பேர் காயமடைந்தது போன்று ஒத்திகை பார்க்கப்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக உட்கட்டமைப்பு, தண்டவாள பராமரிப்பை மேம்படுத்தியுள்ளோம்.
பெட்டிகளில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதை கண்காணிக்க வர்த்தக அலுவலர்கள், ஆர்.பி.எப்., மூலம் அவ்வப்போது சோதனை செய்யப்படுகிறது.
ரயில் விபத்துகளை தடுக்கும் 'கவாச்' தொழில்நுட்பம் படிப்படியாக நடைமுறை படுத்தப்படுகிறது என்றார்.