ADDED : ஜன 03, 2025 02:03 AM
மதுரை:''திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநில அளவில் அதிக உற்பத்தி செய்யும் மதுரை விவசாயிகள் தமிழக அரசின் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்'' என, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பங்கேற்கும் விவசாயி குறைந்தது 2 ஏக்கரில் தொடர்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்களுக்கும் அனுமதி உண்டு. அரசால்அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டிருக்க வேண்டும். விவசாயியின் வயலில் 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை செய்யப்படும்.
இதற்கு ரூ.150 கட்டணத்தை மார்ச் 31க்குள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏப். 15க்குள் அறுவடை செய்ய வேண்டும். திருந்திய நெல் சாகுபடி தொடர்பான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். ஒருமுறை பரிசு பெற்ற விவசாயி அடுத்த மூன்றாண்டுகளுக்கு பங்கேற்கக்கூடாது. படிவத்தை பூர்த்தி செய்து வட்டார உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு பெறும் விவசாயிக்கு குடியரசு தினத்தில் ரூ.5 லட்சம் ரொக்கம், வெள்ளிப்பதக்கத்தை முதல்வர் வழங்குவார் என்றார்.

