UPDATED : அக் 04, 2026 05:36 AM
ADDED : அக் 04, 2026 01:04 AM

சோழவந்தான்: தச்சம்பத்து நெடுங்குளம் பிரிவில் சேதமடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.பல லட்சம் செலவில் மதுரை மெயின், நகரி ரோட்டை இணைக்க தச்சம்பத்தில் இருந்து 3 கி.மீ., தார் ரோடு அமைக்கப்பட்டது. சில மாதங்களிலேயே பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியது. குறிப்பாக மதுரை மெயின் ரோடு அருகே நெடுங்குளம் பிரிவில் 'மெகா சைஸ்' பள்ளம் உருவானது.
சில மாதங்களுக்குப் பின் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பல இடங்களில் 'தார்' உரிந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. மேலும் நெடுங்குளம் பிரிவில் பல 'மெகா சைஸ்' பள்ளங்கள் உருவாகி உள்ளது. ரோடு முழுதும் ஜல்லிக்கற்கள் பரவிக் கிடக்கின்றன. மழைக்காலங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் டூவீலர், நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர்.
இரவில் போதுமான வெளிச்சமில்லாமல் விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
