ADDED : ஏப் 27, 2025 04:56 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை திடலுக்குள் தினசரி மார்கெட், பூ மார்க்கெட், உழவர் சந்தை, ஆட்டுச் சந்தை, காய்கறி மொத்த வியாபாரம், எம்.எல்.ஏ., அலுவலகம், நுாலகம், வேளாண் அலுவலகங்கள் என நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
சந்தைத் திடலை நகராட்சி வசம் ஒப்படைக்கக் கோரி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஊராட்சி நிர்வாகமோ இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால், சந்தைத் திடலுக்குள் சுகாதாரப்பணிகள், ரோடு சீரமைப்பு பணிகள் நடக்காமல் 10 ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது.
எனவே ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி ஏப். 23ல் சாலை மறியல் நடத்திய 25 க்கும் மேற்பட்டோர் கைதாகினர். நேற்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன விவசாய சங்கம், அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., பா.பி., நிர்வாகிகள், சந்தை திடல் வியாபாரிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒன்றிய மேலாளர் தெய்வராமன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து 15 நாட்களுக்குள் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். முற்றுகையிட்டவர்கள், 'நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்த கட்ட போராட்டம் தொடரும்' எனக்கூறி கலைந்தனர்.

