/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பல்கலை கல்லுாரி ஆசிரியர் உள்ளிருப்பு போராட்டம்
/
பல்கலை கல்லுாரி ஆசிரியர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 05, 2025 01:26 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மே சம்பளம் வழங்காததை கண்டித்து ஜூன் 2 முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரின் பேச்சுவார்த்தையால் நேற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இக்கல்லுாரியில் 89 உதவி பேராசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 12 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் ஜூன் 2 முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், பல்கலையில் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால் பல்கலை கல்லுாரியில் உள்ளது. இதுகுறித்து நிதிப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு கல்லுாரி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதனால் இந்தாண்டு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் முதல்வர் ஜார்ஜ் பேச்சு நடத்தினார். வரும் ஜூன் 9க்குள் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அன்றும் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.