/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
50 ஆண்டு மனைகளில் தீர்க்கப்படாத வில்லங்கம் என்ன வில்லத்தனம்... வருவாய் துறை 'எதிர்பார்ப்பதாக' மக்கள் புகார்
/
50 ஆண்டு மனைகளில் தீர்க்கப்படாத வில்லங்கம் என்ன வில்லத்தனம்... வருவாய் துறை 'எதிர்பார்ப்பதாக' மக்கள் புகார்
50 ஆண்டு மனைகளில் தீர்க்கப்படாத வில்லங்கம் என்ன வில்லத்தனம்... வருவாய் துறை 'எதிர்பார்ப்பதாக' மக்கள் புகார்
50 ஆண்டு மனைகளில் தீர்க்கப்படாத வில்லங்கம் என்ன வில்லத்தனம்... வருவாய் துறை 'எதிர்பார்ப்பதாக' மக்கள் புகார்
ADDED : ஜன 30, 2026 06:41 AM

மதுரை : மதுரை கே.புதுார் கற்பக நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளுக்கான பட்டாக்களில் 'சர்க்கார் புறம்போக்கு' என உள்ளது. வருவாய்த் துறையினரே இதுபோன்ற வில்லங்கம் உருவாக்கி பொதுமக்களை பிரச்னைக்குள் ஆழ்த்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை கற்பகநகரில் 1971ல் 837 பிளாட்டுகள் கொண்ட லே அவுட் உருவாக்கி விற்பனை செய்யப்பட்டது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் டிரஸ்ட் சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு பலரும் வீடுகளை கட்டினர். இவர்களில் 15 சதவீதம் பேரே மனைகளுக்கான பட்டாக்களை அப்போது பெற்றுள்ளனர். விழிப்புணர்வு இன்மையால் பலரும் பத்திரங்களை வைத்தே பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். 2018ல் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பட்டா அவசியம் என்ற நீதிமன்ற உத்தரவால், அதன்பின் பலரும் பட்டா பெற முயன்றனர்.
இந்நிலையில் பல மனைகளின் பட்டாக்கள் 'சர்க்கார்', 'புறம்போக்கு', வெறுமனே 'மனை' என்றெல்லாம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் குடியிருப்போர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கீகாரம் பெற்ற மனைக்கு 'ரயத்பட்டா' என்று இருப்பதற்கு பதில் 'சர்க்கார் புறம்போக்கு' என்று இருப்பதால், பத்திரங்கள் தம் பெயரில் இருந்தாலும் பட்டா அரசு பெயரில்தானே இருக்கிறது என்று புலம்புகின்றனர்.
குடியிருப்போர் சிலர் கூறியதாவது: அங்கீகாரம் பெற்ற மனைக்கான பட்டாக்களை வருவாய், நிலஅளவைத் துறையினர் தவறாக பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் முறையான பட்டா பெறமுடியாமல் தவிக்கிறோம். வீடுகட்ட அனுமதி, கடன், பத்திரப்பதிவு போன்ற நடைமுறைக்கு பட்டா அவசியம். அது முறையாக வழங்கப்படாததால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்படுகிறோம்.
இப்போது பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 'சம்திங்' எதிர்பார்க்கின்றனர். வருவாய், நில அளவைத் துறையினர் செய்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாளியாவோம். காலி மனைகள், முதியோர், விவரம் அறியாதவர்களுக்கான மனைகளில் இத்தகைய வில்லங்கங்களை அதிகாரிகளே உருவாக்கியுள்ளனர். ஒரு நபரின் 2 பட்டாக்களில், ஒன்றில் அவர் பெயரும், மற்றொன்றில் சர்க்கார் என்றும் உள்ளது. ஒரே சர்வே எண்ணில் உள்ள மனைகளுக்கு எப்படி இருவகை பட்டா இருக்க முடியும் என்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்களிடம் விசாரித்ததில், ''எப்போதோ நடந்த விஷயம். அதை சரிசெய்ய விண்ணப்பித்தால் ஆவணங்களை சரிபார்த்தே வழங்க முடியும். இப்பணிக்காக 'நிறைய' எதிர்பார்த்தவர்கள் யாரென தெரியவில்லை. விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

