ADDED : மே 19, 2025 05:54 AM

வாடிப்பட்டி: பரவை- அதலை ரோட்டில் உப்பு ஓடை பாலம் அருகே 8 ஆண்டுகளுக்கு முன் கட்டிய குடிநீர் மேல்நிலை தொட்டி இன்றுவரை பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியின் விரிவாக்க பகுதியில் தினமும் வீடுகள் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியின் தேவைக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி 8 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இதில் குடிநீர் ஏற்ற 'பைப் லைன்கள்' உள்ளன. வீடுகளுக்கு விநியோகம் செய்ய 'பைப் லைன்' இன்று வரை வழங்கவில்லை.
இதனால் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் 'பைப்கள்' துருப்பிடித்துள்ளன. இப்பகுதியினர் தண்ணீர் தேவைக்காக சிரமப்படுகின்றனர்.
பேரூராட்சி வழங்கும் குடிநீர் சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியாததால், குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.