/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூர் பகுதியில் தொடருது யூரியா தட்டுப்பாடு
/
பேரையூர் பகுதியில் தொடருது யூரியா தட்டுப்பாடு
ADDED : நவ 10, 2025 01:14 AM
பேரையூர்: பேரையூர் சுற்றுவட்டார பகுதியில் யூரியா மற்றும் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி யூனியன்கள் உள்ளன. இப்பகுதியில் நெல் நடவு பணி நடக்கிறது. நெல் பயிர்களுக்கு மேலுரம், நடவு செய்த பயிர்களுக்கு அடிஉரமும் இட வேண்டும். மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கும் உரம் தேவைப்படுகிறது. இப் பகுதியில் தனியார் கடை களில் யூரியா மற்றும் டி.ஏ.பி., உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரமே இந்நிலை இருந்தது. அது தற்போதும் தொடர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உர வியாபாரிகள் கூறியதாவது: ஒரு மாதமாக யூரியா சப்ளை இல்லை. உரம் தட்டுப்பாடு இருப்பதால் விவசாயிகளிடம் பதில் சொல்ல முடியவில்லை என்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் 2 மூடைகள் மட்டுமே வழங்குகின்றனர். தனியார் கடைகளில் உரங்கள் கிடைப்பதில்லை. இப்படி இருந்தால் நாங்கள் எப்படி விவசாயம் செய்வது என்றனர். உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

